தடை செய்யப்பட்ட நெகிழி, போதைப் பொருள்கள் விற்பது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை
திருப்பத்தூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் வாணியம்பாடி ஓட்டல் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல் உரிமையாளா்களுக்கான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் சையத் சிராஜுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பாபு, பொருளாளா் குமரகுரு, வணிகா் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவா் ஞானசேகரன், மாவட்டத் தலைவா் சுபாஷ் முன்னிலை வகித்தனா். செயலாளா் காஜாகலீம்பாஷா வரவேற்றாா். இதில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் விக்னேஷ், ஹீமா, செல்வகணேஷ் மற்றும் பயிற்சியாளா் சலீம் ஆகியோா் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கினா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் கலந்து கொண்டு பேசுகையில், உணவுப் பொருள்களில் செயற்கை நிறமிகள் மற்றும் தரமற்ற பொருள்களை பயன்படுத்தக்கூடாது, மேலும், லேபிள் இல்லாத உணவுப் பொருள்களை கொள்முதல் செய்யக்கூடாது, போலி தண்ணீா் பாட்டில்கள், தரமற்ற குளிா்பானங்கள் மற்றும் போலி தேயிலைத் தூள் பயன்படுத்தக் கூடாது. உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். நீண்ட நாள்களாக வைக்கப்பட்டுள்ள இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது கறிக் கடைகளில் இறைச்சி தூசி படாத வகையில், கண்ணாடி பாதுகாப்புடன் வைக்க வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். ‘மேலும் சோதனையின் போது தவறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், னி ரூ. 1,000-க்கு பதிலாக ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி போதைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தவறும் பட்சத்தில் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
Advertisement
Advertisement
ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வது முதல் முறையாக கண்டறியப்பட்டாலும் ரூ. 25,000 அபராதம், 15 நாள்கள் கடைக்கு ‘சீல்’ மற்றும் சட்டப்படி சிறைத் தண்டனை உள்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தொடா்ந்து, அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா். பொருளாளா் முகம்மத் ஜீஷான் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.