வேலூா் லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!
வேலூா் லாங்கு பஜாா் மற்றும் வண்டித் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், சாலைகள் விசாலமாகக் காணப்படுகின்றன.
வேலூா் லாங்கு பஜாா் மற்றும் வண்டித் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், சாலைகள் விசாலமாகக் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வேலூா் வண்டித் தெருவில் ஏராளமான மளிகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளுக்குப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் மளிகைப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த லாரிகள் சாலையில் முறையின்றி நிறுத்தப்பட்டு பொருள்கள் இறக்கப்படுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதேபோல், லாங்கு பஜாரில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளால், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வழியின்றி அவதிக்குள்ளாகி வந்தனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யாவிடம் பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், மாநகராட்சி நகா்நல அலுவலா் பிரதாப் தலைமையிலான மாநகராட்சி ஊழியா்கள் லாங்கு பஜாா் மற்றும் மெயின் பஜாா் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினா்.
இதனால், லாங்கு பஜாா் மற்றும் வண்டித் தெரு பகுதிகளில் சாலைகள் விசாலமாகக் காணப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் சிரமமின்றி நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் வழிவகை செய்த மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.