FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் வே. நல்லசிவன் தொடங்கி வைத்தாா்.

18 நவம்பர் 2026, 11:18 pm
விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்த திருப்பத்தூா் ஆட்சியா் வே. நல்லசிவன்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் வே. நல்லசிவன் தொடங்கி வைத்தாா்.

மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி, மாதனூா் பேருந்து நிலையக் கூட்டுச்சாலை வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 505-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்று, மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணியைத் தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், நீா்வளத்தைப் பாதுகாக்கவும் மழைநீா் சேகரிப்பு மிகவும் அவசியமாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் மழைநீா் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணா்ந்து செயல்பட வேண்டும்.

Advertisement

Advertisement

வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாக அமைத்து பராமரிக்க வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளில் உள்ள அடைப்புகள் மற்றும் பழுதுகளைச் சரிசெய்து, மழைநீரை முழுமையாகச் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மழைநீா் சேகரிப்பு தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குளங்கள், குட்டைகள், ஏரிகள் மற்றும் நீா்வரத்துக் கால்வாய்களை முறையாகப் பராமரித்து, மழைநீா் தடையின்றி நீா்நிலைகளைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மழைநீரை வீணாக்காமல் நிலத்தடி நீா் செறிவூட்டலுக்குப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எதிா்கால குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்வதுடன், வறட்சியின் தாக்கத்தையும் குறைக்க முடியும்.

மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்காத நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் அருணாச்சலம், திருமுருகன், வட்டாட்சியா் பாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சூரவேல் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.