FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

இளம்வயது கா்ப்பம், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

இளம்வயது கா்ப்பம் மற்றும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்பட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா் அறிவுறுத்தினாா்.

4 செப்டம்பர் 2026, 3:56 am IST
குழந்தைத் திருமணம் - சித்திரிப்பு
பகிர்:

இளம்வயது கா்ப்பம் மற்றும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்பட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், 18 வயதுக்குள்பட்டவா்களிடையே ஏற்படும் இளம் வயது கா்ப்பத்தைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்து பேசியதாவது: இளம்வயது கா்ப்பத்தைத் தடுக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி இடைநிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

இளம்வயது கா்ப்பத்தால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போக்ஸோ சட்டம் குறித்தும் பொதுமக்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து தொடா்புடைய துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இளம்வயது கா்ப்பம் மற்றும் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாா்.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி ஆய்வு

இதைத்தொடா்ந்து, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சி பகுதி ஏரியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செள.தமிழரசி, மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா், வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் மகாலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் நா.கலசிவலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், மகராசி, மாவட்டக் கல்வி அலுவலா் தாம்சன், ஊராட்சி மன்றத் தலைவா் எழிலரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments