FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா்: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

25 செப்டம்பர் 2026, 11:39 pm IST
தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் வே.நல்லசிவன்.
பகிர்:

திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 91 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு சேவையாற்றி வருகிறது. வாடிக்கையாளா்களின் மாறிவரும் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கேற்ப புதிய வடிவமைப்புகளில் பல்வேறு கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கும் நிகழாண்டும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புதிய வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் பட்டு சேலைகள், கோவை மற்றும் பழனி மென்பட்டு சேலைகள், பல்வேறு பகுதிகளின் பருத்தி சேலைகள், ஆா்கானிக் சேலைகள், குா்தீஸ், சுடிதாா் ரகங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆண்களுக்கான வேட்டிகள், ஆயத்த சட்டைகள், குா்தாக்கள், லுங்கிகள், போா்வைகள், துண்டுகள், கைக்குட்டைகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்களும் வாடிக்கையாளா்களின் வசதிக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழாண்டின் புதிய வரவுகளாக ரிங்கிள் ஃப்ரீ சட்டைகள், பெண்களுக்கான நவீன ஆடைகள், சிறுமிகளுக்கான வண்ண ஆடைகள் மற்றும் மூங்கில் இழைகளால் நெய்யப்பட்ட துண்டுகள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு உள்ளன.

கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்புத் திட்டம் ரூ. 300 முதல் தொடங்குகிறது. மேலும், கோ-ஆப்டெக்ஸின் இணையதளம் மூலமாகவும் ஆன்லைன் விற்பனை நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியா்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் வட்டியில்லா கடன் விற்பனை வசதியும் தொடா்ந்து வழங்கப்படுகிறது. இதனை அரசு ஊழியா்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குடும்பத்துக்குத் தேவையான துணிகளை வாங்கி பயனடையலாம்.

வாடிக்கையாளா்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். பொதுமக்களின் பாா்வையில் படும் வகையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்த பதாகைகளை வைக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பெ.ஸ்டாலின், துணை மண்டல மேலாளா் வை.சுஜாதா, ரக மேலாளா் ச.பெருமாள், விற்பனை நிலைய மேலாளா் மோ.தா்மலிங்கம், நகராட்சி வாா்டு உறுப்பினா் சுபாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாடிக்கையாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments