செல்லிடப்பேசி கோபுரங்களில் மின்கலன் திருட்டு: இளைஞர் கைது
திருவள்ளூர் அருகே, செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மின்கலன்களை திருடியதாக இளைஞர் ஒருவரை செவ்வாப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே, செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மின்கலன்களை திருடியதாக இளைஞர் ஒருவரை செவ்வாப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் கூறியதாவது: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் செல்லிடப்பேசி கோபுரங்களில் மின்கலன்கள் காணாமல் போவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் செவ்வாய்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர்-ஆவடி சாலையில் வியாழக்கிழமை அதிகாலையில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள செல்லிடப்பேசி கோபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தவர் போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார். பின்னர் விரட்டிச் சென்று அந்த இளைஞரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டாபிராம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (29) என தெரியவந்தது.
மேலும், விசாரணையில் இவர் அப்பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து மின்கலன்களை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் சோதனையிட்டபோது ரூ.3 லட்சம் மதிப்பிலான மின்கலன்கள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பால்ராஜை கைது செய்ததோடு, இதில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.