இன்று 5 இடங்களில் அம்மா திட்ட முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராமப் பகுதிகளில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் மாவட்டத் தலைநகருக்கு வந்து செல்கின்றனர். இதுபோன்று வருவதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் பண விரயமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் இருப்பிடத்திலேயே நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயன்பெறும் நோக்கத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் வாரந்தோறும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில், முதியோர் ஓய்வூதியம், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை, நிலப் பிரச்னை குறித்தும், நலத்திட்ட உதவிகள் பெறவும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இக்கோரிக்கை மனுக்கள் மீது அந்தந்த துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியானோருக்கு அன்றைய நாளிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ள கிராமங்கள்: பொன்னேரி- திருப்பாலைவனம் கிராமம்-1 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும், திருத்தணி-மத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரிலும், ஊத்துக்கோட்டை-ஏனம்பாக்கம் கிராம ஊராட்சி அலுவலகம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகிலும், திருவள்ளூர்-தோமூர் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு அருகிலும் அம்மா திட்ட முகாம் நடைபெற இருக்கிறது. அதனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் முகாமில் பங்கேற்று மனுக்களை அளித்துப் பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.