FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கேரளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 5:32 am IST
பகிர்:

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலானநிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 
கேரளத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள்  உணவு, குடிநீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். 
இதைத் தொடர்ந்து, கடைகள், பண்டகசாலைகள் மற்றும் பொதுமக்களிடம் அதிகாரிகள் நேரில் சென்று அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள், துணி வகைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 
இவ்வாறு சேகரித்த பொருள்கள் அனைத்தையும் தரம் பிரித்து 5 லாரிகளில் ஏற்றி கேரளத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்து நிவாரணப் பொருள்கள் ஏற்றிய லாரிகளின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரள மாநில மக்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பல்வேறு வகையான உடைகள், போர்வைகள், மெழுகுவர்த்தி, கோரைப்பாய், அரிசி, கோதுமை மாவு, ரவை, சேமியா, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், நோட்டுப் புத்தகங்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட 42 ஆயிரம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருள்களை முதல்கட்டமாக ஐந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
மேற்படி நிவாரணப் பணிகளில் பங்குகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிவாரணப் பொருள்களை தங்களது இருப்பிடத்தின்  அருகிலுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு:  திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர்-ஆட்சியர் அலுவலகம்  044-27662222, 044-27661200, திருவள்ளூர் கோட்ட சார் -ஆட்சியர் டி.ரத்னா-9445000412, பொன்னேரி கோட்டாட்சியர் வி.முத்துசாமி-9445000410, திருத்தணி கோட்டாட்சியர் 
வி.பவணந்தி-9445000411 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு நிவாரணப் பொருள்களை அளிக்கலாம்.  
இதுபோன்று பொதுமக்கள் மற்றும் கடைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களால் அளிக்கப்படும் நிவாரணப் பொருள்கள் அனைத்தும் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், சார்- ஆட்சியர் ரத்னா, பொன்னேரி கோட்டாட்சியர் வெ.முத்துசாமி, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன்  இருந்தனர்.
சேவாலயா பணியாளர்கள்...
கேரளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சேவாலயா பணியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் வழங்கினர். 
கேரளத்தில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் உணவு, குடிநீரியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அம்மாநில  மக்களுக்கு பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா அறக்கட்டளையின் பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியம் ரூ.1.05 லட்சத்தை நிவாரணமாக வழங்கியுள்ளனர். அதோடு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் மற்றும் ரூ.52 ஆயிரம் மதிப்பிலான மருந்துப் பொருள்கள், பிளாஸ்டிக் வாளிகள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேவாலயா பணியாளர்கள் ஒப்படைத்தனர்.
பள்ளி ஆசிரியர்கள்...
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் திருத்தணி ஒன்றிய ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனர்.
 கேரளத்தில் பலத்த மழையால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், கேரள வெள்ள நிவாரணத்திற்காக திருத்தணி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள்,  நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பில் நிவாரண நிதி வழங்க தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு டன் அரிசி, பருப்பு வகைகள், தின்பண்டங்கள், சமையல் எண்ணெய், காலணிகள், மருந்து, மாத்திரைகள் உள்பட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை ஆசிரியர் குழுவினர் திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலர் பாபுவிடம் ஒப்படைத்தனர். 
 பின்னர், வெள்ள நிவாரணப் பொருள்களை ஒரு வாகனத்தில் ஏற்றி திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு, இடைநிலை ஆசிரியர்கள் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
பெட்ரோல் விற்பனையாளர்  சங்கத்தினர்...
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட பாரத் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனர். 
கேரளத்தில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பாரத் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக கேரள மக்களுக்கு மருந்து, உணவுப் பொருள்கள், ஆடைகள், குடிநீர் பாட்டில்கள், போர்வைகள் மற்றும் குழந்தைகளுக்கான துணிவகைகள், பால்பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஞாயிற்றுக் கிழமை மாலை லாரிகள் மூலம் கேரளத்திற்கு அனுப்பி வைத்தனர். நிகழ்வில், சங்க நிர்வாகிகள் முருகன், ராஜகோபால், பாபுமுருகன், ரமேஷ், சக்திமுருகன், தமிழரசி, மாயா சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments