முகப்பு
திருவள்ளூர்

மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு?பொதுமக்கள் அவதி

மாதவரம் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலர்களும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் எனக் கூறிவிட்டுச் செல்வதால்,

Updated On : 25 செப்டம்பர் 2018, 4:26 am IST
பகிர்:


மாதவரம் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலர்களும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் எனக் கூறிவிட்டுச் செல்வதால், பணிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாதவரம் தாலுக்கா அலுவலகம் 2009-இல் மாதவரத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், புழல் பாலாஜி நகரில் 6,438 சதுர அடி பரப்பளவில் தரைத் தளம், முதல் தளம் என இரு தளங்களுடன் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது. 
இந்த அலுவலக தரைத் தளத்தில் வருவாய்த்துறையும், முதல் தளத்தில் தேர்தல் துறைப் பிரிவும் உள்ளது. இந்த அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு ரூ.2.30 கோடியாகும். இங்குள்ள அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், மாதவரம் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு நிலையான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்று விடுகின்றனர். இதனால் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில், பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாடிச் செல்லும்போது அதிகாரிகள் இல்லாத காரணத்தால் பணிகள் முடங்கி விடுகின்றன. இதைத் தொடர்ந்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களை தவிர்க்குமாறும், அல்லது விடுமுறை நாள்கள் அல்லது பணி நேரம் முடிந்த பின் நடத்துமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அரசின் நிர்வாக வசதிக்காக ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மாதவரம் தாலுக்கா செங்குன்றம் வட்டத்தில் இருந்த 26 கிராமங்களில் 13 கிராமங்கள் பொன்னேரி தாலுக்கா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டன. இதில், நாரவாரிக்குப்பம், கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 கிராம நிர்வாக அலுவலர்கள் 10 கிராமங்களையும் சேர்த்து கவனித்து வருகின்றனர். 
மீதமுள்ள 13 கிராமங்கள் மாதவரத்தில் உள்ளன. பட்டா மாறுதல் முதியோர் மற்றும் திருமண உதவித் தொகை, ஆதார் எண் பெறுவது உள்ளிட்ட அனைத்து வகையான வருவாய்த்துறை பணிக்காக மனுதாரர்கள், மாணவ-மாணவியர் மற்றும் பயனாளிகள் அனைவரும் பொன்னேரி தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டும். 
செங்குன்றம் சுற்றுவட்டாரங்களில் இருந்து 20 முதல் 25 கி. மீ. தூரம் பயணித்து அப்பகுதி மக்கள் பொன்னேரி தாலுக்கா அலுவலகம் சென்று வர வேண்டும். அவர்கள் புழலில் உள்ள மாதவரம் தாலுக்கா அலுவலகத்திற்கு 3 முதல் 7 கி.மீ. தூரம்தான் பயணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உடல்நிலை பாதித்த முதியோர், கர்ப்பிணிகளும் போக்குவரத்து பிரச்னையால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட அனைத்துப் பணியும் முடங்கிக் கிடக்கின்றன. மாதவரம் தாலுக்கா அலுவலகமும் வெறிச்சோடிக் கிடக்கிறது. 
மேலும், மாதவரம் தாலுக்காஅலுவலகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவித் தொகை பெறும் பயனாளிகள் இடமாற்றம் காரணமாக ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். 
எனவே, பிரிக்கப்பட்ட 13 கிராமங்களை மீண்டும் மாதவரம் தாலுக்காவில் இணைக்க வேண்டும். அரசு அதிகாரிகள் பணி நேரங்களில் அலுவலகப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.