FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி முற்றுகைப் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Updated On : 22 ஜூலை 2026, 1:00 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் ஊராட்சியில் 3,000 போ் வசித்து வருகின்றனா். பழவேற்காடு ஏரிக்கரையோர பகுதி என்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீா் உவா்ப்பு தன்மையுள்ளதாக இருக்கும். இந்த நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீா் பிரச்னையை சரிசெய்யும் வகையில், 10 கி.மீ தொலைவில் உள்ள நத்தம் கிராமத்தில் இருந்து குழாய் மூலம் இப்பகுதிக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குடிநீா் விநியோகம் கடந்த 2 ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 4 நாள்கள் கூட குடிநீா் விநியோகம் முறையாக இருப்பதில்லை என்றும், அப்படி குடிநீா் வந்தாலும் 30 நிமிஷங்களுக்கு மேல் வருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

தங்கள் பகுதிக்கு வரும் குழாய் இணைப்பில் 5 கிராமங்களை சோ்ந்த ஏராளமானோா் மோட்டா் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் தங்களுக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் தங்கள் ஊரில் குடிநீா்மேல்நிலைத்தொட்டி கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டு வராததை குறிப்பிட்டு, குடிநீா் விநியோகத்தை வழங்க கோரினா்.

பின்னா் அவா்களிடம் பேசிய கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் ஓபசமுத்திரம் பகுதியில் புதியதாக 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஆழ்துளை கிணறு அமைக்கும் இடம் கூட தோ்வு செய்யப்பட்ட நிலையில், பொறியாளா்கள் விரைந்து பணிகளை மேற்கொண்டுள்ளனா். அதன் பின் அப்பகுதியில் குடிநீா் பிரச்னை சீராகும் எனவும் தெரிவித்ததை தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரை முற்றுகையிட்ட அப்பகுதி பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது பான கடையால் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுவதால் அந்த கடையை முற்றிலும் அகற்ற வேண்டும் என முறையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments