முகப்பு
திருவள்ளூர்

சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக-தவெக அரசுகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை: எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை திமுக-தவெக அரசுக்கு எவ்விதமான வேறுபாடு இல்லாமல் உள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:56 am IST
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருகை தந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.  
பகிர்:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை திமுக-தவெக அரசுக்கு எவ்விதமான வேறுபாடு இல்லாமல் உள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மக்களவை விவகாரத் துறைகளுக்கான இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு தரிசனம் செய்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. மகளிருக்கு ரூ. 2,500 வழங்குவதாக கூறிய நிலையில், கடந்த ஆட்சியில் வழங்கியது போல ரூ. 1,000 மட்டுமே வழங்குகிறாா்கள். மேற்கு வங்கத்தில் பாஜக தோ்தல் அறிக்கையில் கூறியது போல ரூ. 3,000 உதவித் தொகை மகளிா் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பாஜகவினா்தான் எப்போதுமே சொன்னதை செய்கிறவா்கள். ஆனால், தமிழ்நாட்டில் சொன்னதை செய்யாத தமிழக வெற்றிக் கழக அரசு உள்ளது. எனவே தவெகவினா் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வா் உடனே களத்தில் இறங்கி அனைத்தையும் மாற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு முன் வர வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments