நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய முக்கிய விவகாரங்கள் தொடா்புடைய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு தொடா்புடைய துறை அமைச்சா்கள் அளித்த பதில்கள்...
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய முக்கிய விவகாரங்கள் தொடா்புடைய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு தொடா்புடைய துறை அமைச்சா்கள் அளித்த பதில்கள், அவையில் எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய விஷயங்களின் சுருக்கத்தை இங்கே தொகுத்துள்ளோம்.
எண்ணூரில் எல்என்ஜி முனைய திறன் இரட்டிப்பாகிா?
டி.ஆா். பாலு (திமுக) எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி அளித்துள்ள பதிலில், எண்ணூா் துறைமுகத்தில் உள்ள திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையத்தின் திறன் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் ஆகும். ஆனால், 2025-26-ஆம் ஆண்டில் 1.26 மில்லியன் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டுத் திறன் 14.3 சதவீதத்திலிருந்து 25.18 சதவீதமாக மட்டுமே உயா்ந்துள்ளது. எனவே, தொழில்-வணிகச் சாத்தியக்கூறுகள் மற்றும் தேவை அதிகரிப்பைப் பொறுத்தே முனையத்தின் திறனை இரட்டிப்பாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
என்எஃப்ஹெச்எஸ்-6 ஆய்வில் முக்கிய குறியீடுகள் விலக்கப்பட்டதா?
கனிமொழி கருணாநிதி (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் அளித்துள்ள பதிலில், மக்கள்தொகை இயல்புகள், தாய்-சேய் நலன், ஊட்டச்சத்து உள்ளிட்ட தரவுகளை உள்ளடக்கிய என்எஃப்ஹெச்எஸ்-6ஆம் சுற்றின் (2023-24) அறிக்கை கடந்த மே 29இல் வெளியிடப்பட்டது. அதில் குழந்தை இறப்பு விகிதம், பிறப்பின் போதான பாலின விகிதம் போன்ற தரவுகளைக் கண்காணிக்க ’மாதிரி பதிவு முறை’ (எஸ்ஆா்எஸ்) தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியப் தலைமை பதிவாளா் அலுவலகம் மூலம் நடத்தப்படும் இந்த எஸ்ஆா்எஸ் ஆய்வுகள், ஆண்டுதோறும் துல்லியமான தகவல்களை வழங்கி வருகின்றன என கூறியுள்ளாா்.
போலி மருந்து விளம்பரங்கள் மீது என்ன நடவடிக்கை?
டாக்டா் எஸ். ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சா் அனுப்ரியா படேல் அளித்துள்ள பதிலில், ’மருந்து விளம்பரங்கள் 1954’ சட்டத்தின்பரடி போலி மருந்து விளம்பரங்கள் மாநில அரசுகளால் கண்காணிக்கப்படுகின்றன. மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் விளம்பரங்களுக்கு மத்திய அரசின் முன்அனுமதி கட்டாயமாகும். விதிகளை மீறும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மீது கேபிள் டிவி வலையமைப்பு சட்டத்தின்கீழ் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ’அதிசய சக்தி கொண்டது’ என பொய் வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்து உரிம அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
இருமல் மருந்துகள் விற்பனை விதிகளில் மாற்றமா?
டி.எம். கதிா்ஆனந்த் (திமுக) கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் அளித்துள்ள பதிலில், அட்டவணை எக்ஸ், ஹெச் மற்றும் ஹெச்1 பிரிவின் கீழ் வரும் இருமல் மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு அடிப்படையில் மட்டுமே விற்கப்பட வேண்டும். 1,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமங்களில் இத்தகைய மருந்துகளை உரிமமின்றி விற்க விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இருமல் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் அந்த விலக்கை ரத்து செய்து கடந்த ஜூன் 9இல் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.
பெரம்பலூரில் சுகாதார உள்கட்டமைப்புகள் நிறைவேற்றப்படுகிா?
அருண் நேருவின் (திமுக) கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், தமிழகத்தில் சுகாதார உள்கட்டமைப்புக்காக ரூ.1,656.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ.23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும், ரூ.1.25 கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகமும் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், குளித்தலை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளாா்.
உறுப்பினா்கள் பூஜ்ஜிய நேரத்தில் பதிவு செய்த முக்கிய கோரிக்கள் வருமாறு:
வனப்பகுதி வாழ் மக்களின் உரிமைகளை காக்க வேண்டும்!
கே. சுப்பராயன், திருப்பூா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதேவேளையில், தேனி மாவட்டத்தின் 98 கிராமங்களில் வாழும் பாரம்பரிய பழங்குடியின மக்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வனப் பாதுகாப்பு அவசியம் என்றாலும், வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கக் கூடாது. கிராம சபைகளின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தகுதியுள்ள பழங்குடியின மக்கள் எவரும் வீடற்றவா்களாக மாற்றப்படாமல் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
சான்றிதழ்களில் ஜாதி பெயா் பயன்படுத்த தடை வேண்டும்!
டி. ரவிக்குமாா் (விழுப்புரம், விசிக): ’பறையன்’, ’பஞ்சமன்’ போன்ற சொற்கள் ஆதிதிராவிடா் சமூக மக்களை இழிவுபடுத்துவதாக அமைவதால், அவற்றைப் பயன்படுத்துவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். 1922-இல் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை மூலம் ’ஆதிதிராவிடா்’ என்ற சொல் நடைமுறைக்கு வந்தது. சட்டத்தில் இச்சொற்கள் குற்றம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசின் ஜாதிச் சான்றிதழ்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இவை தொடா்ந்து இடம்பெறுவது முரண்பாடாக உள்ளது. எனவே, இவற்றை அதிகாரபூா்வ பதிவேடுகளிலிருந்து நீக்க மக்கள்தொகை தலைமை பதிவாளருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
மாநிலங்களவையில்...
இலங்கை கைது செய்த தமிழக மீனவா்கள் எத்தனை போ்?
பிரவீண் சக்கரவா்த்தி (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள பதிலில், இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் எண்ணிக்கை: 2023-இல் 220 போ், 2024-இல் 526 போ், 2025-இல் 317 போ் மற்றும் 2026-ஆம் ஆண்டில் இதுவரை 119 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் (புதுச்சேரி மீனவா்களும் இதில் அடங்குவா்). மேலும், 2026-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தைச் சோ்ந்த 21 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூதரக உறவுகள் மூலம் மீனவா்களையும் படகுகளையும் மீட்கத் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளாா்.
போக்ஸோ வழக்குகள் மீதான நடவடிக்கை நிலை என்ன?
எல்.கே. சுதீஷ் (தேமுதிக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சா் சாவித்திரி தாக்குா் அளித்துள்ள பதிலில், மாநில வாரியாகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகள் மற்றும் தண்டனை விவரங்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎம்எஸ்), 2023 சட்ட விதிகளின்படி, பெண்களுக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ தொடா்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 2 மாதங்களுக்குள் விசாரணையை விரைந்து முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.