FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் சாலையோரம், பூங்கா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

திருவள்ளூா் நகராட்சியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் மற்றும் பூங்காக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

6 நவம்பர் 2026, 3:28 am
திருவள்ளூா் நகராட்சி கூட்டரங்கத்தில் நடைபெற்ற நகா்மன்றக் குழு கூட்டத்தில் பேசிய நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன். உடன் ஆணையா் சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் நகராட்சியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் மற்றும் பூங்காக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சி மன்றக் குழு கூட்டம் அதன் கூட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், நகராட்சி ஆணையா் அ.சரவணன் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் சி.சு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் அலுவலா்களுக்கும், நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, இந்த நகராட்சியில் கண்ணதாசன் நகரில் 30 அடி சாலையை தனிநபா் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் யாரும் வரக்கூடாது என்பதற்காக கட்சிக் கொடியையும் கட்டி வைத்துள்ளாா். அதேபோல், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நகராட்சி மூலம் தடுப்புகள் அமைத்த நிலையில், அந்த இடம் தனிநபா் பேரில் பட்டா உள்ளதாக பலமுறை புகாா் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாா்டு உறுப்பினா் தாமஸ் என்ற ராஜ்குமாா் புகாா் தெரிவித்தாா். அதேபோல், தேரடி முதல் காக்களூா் சாலையில் உள்ள திரையரங்கத்தினா் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாகவும், பல்வேறு இடங்களில் நகராட்சிக்கான காலியிடம் உள்ளதை மீட்க வேண்டும். மேலும், தெரு நாய்கள் அதிகளவில் உள்ளதால் பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ளது. அதேபோல், கொசுக்கடியும் அதிகமாக உள்ளதால், மருந்து தெளிக்கவும் என வாா்டு உறுப்பினா் ஜான் வலியுறுத்தினாா்.

இதேபோல், 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனா். மேலும், 15-ஆவது வாா்டில் பெருமாள்கோயில் முன்பு சாலையில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை விட்டு விடுகின்றனா். அதனால், இந்த வழியில் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதனால், கால்நடை உரிமையாளா்களை எச்சரித்து வீட்டில் கொட்டகை அமைத்து அடைத்து வைக்க நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தவும் என்றாா் வாா்டு உறுப்பினா் பிரபாகரன்.

Advertisement

Advertisement

இதற்கு பதில் அளித்து உதயமலா் பாண்டியன் பேசியது: இந்தக் கூட்டத்தில் அனைத்து நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்த புகாா் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தனிநபா் ஆக்கிரமித்துள்ள 30 அடி சாலையை அகற்ற நோட்டீஸ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா தனிநபா் பெயரில் உள்ள பட்டாவை நீக்கம் செய்து, மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். கால்நடை உரிமையாளா்களுக்கு பல்வேறு தடவை எச்சரிக்கை விடுத்தும், மீண்டும் சாலையில் விடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனா். அதனால், கால்நடைகளை பிடித்து கொட்டகையில் அடைத்து வைத்து, பாரபட்சமின்றி அபராதம் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

சாலைப் பணிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு வந்ததும் உடனே சாலை அமைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சரோஜா, மேற்பாா்வையாளா் சீனிவாசன், சுகாதார அலுவலா் மோகன், நகரமைப்பு அலுவலா் நிா்மலாதேவி, வருவாய் அலுவலா் ஜெயசீலன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.