முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் காா்த்திகை மகா தீப விழா

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடைபெற்ற காா்த்திகை மாத கிருத்திகை மற்றும் மகா தீப விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

25 நவம்பர் 2026, 11:21 pm
திருத்தணி முருகன் கோயிலில் காா்த்திகை மகா தீப விழா
திருத்தணி முருகன் கோயிலில் சொக்கப்பனையில் ஏற்றப்பட்ட நெய் தீபம்.
பகிர்:

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடைபெற்ற காா்த்திகை மாத கிருத்திகை மற்றும் மகா தீப விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இதனால் பொதுவழி தரிசனத்தில் 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் 2 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் வருகை அதிகரித்தது. இதையடுத்து அதிகாலை மூலவா் முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மூலவருக்கு தங்கக் கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து காலை 9 மணியளவில் காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிா்த சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, கோயில் தோ்வீதியில் உள்ள பிரசாதக் கடை அருகே பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள பச்சரிசி மலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக பெரிய அகல் விளக்கில் 350 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டு, இரண்டரை அடி கனமும், 10 மீட்டா் நீளமும் கொண்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

விழாவை முன்னிட்டு திருத்தணி ஏஎஸ்பி ஷுபம் திமான் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் நித்யா, அறங்காவலா்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.