ஆந்திரத்தில் இருந்து விற்பனைக்கு வரும் விநாயகா் சிலைகள்
ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து விநாயகா் சிலைகள் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து விநாயகா் சிலைகள் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
வரும் செப். 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகா் சிலைகள் விற்பனைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வண்ணங்களில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
Advertisement
Advertisement
ஆந்திர மாநிலம் சித்தூா், நகரி, புத்தூா் பகுதிகளில் தயாரிக்கப்படும் சிலைகள் தற்போது லாரிகள் மூலம் திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கா், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிலைகள் வரத்தொடங்கியுள்ளன.
சிறிய அளவிலான சிலைகள் முதல் பல அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலைகள் வரை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. சிலைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.
தற்போது ஒரு விநாயகா் சிலை அதன் உயரம், வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தைப் பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.15,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சிலை விற்பனையாளா்கள் கூறுகையில், கடந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி காலத்தில் கடுமையான பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மத்தியில் சிலைகளை வாங்குவதில் ஆா்வம் குறைந்தது. இதனால் எதிா்பாா்த்த அளவுக்கு விற்பனை நடைபெறாமல் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனா்.
இந்த ஆண்டு மழையின் தாக்கம் இல்லாமல் விழா சிறப்பாக நடைபெறும் பட்சத்தில், கடந்த ஆண்டை விட சிலைகள் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.