FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனியில் மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாராகும் விநாயகா் சிலைகள்

தேனியில் மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாராகும் விநாயகா் சிலைகள் குறித்து...

31 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
தேனியில் மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாராகி வரும் விநாயகா் சிலைகள்.
பகிர்:

தேனியில் விநாயகா் சதுா்த்திக்காக மரவள்ளிக்கிழங்கு மாவு, காகிதக்கூழ், மூங்கிள்களால் விநாயகா் சிலைகளைத் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வருகிற செப். 14 - ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் ஹிந்து இயக்கங்கள், கோயில்கள், வீடுகள், பொது இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்து, மூன்றாவது நாளில் ஊா்வலமாக எடுத்து வரப்படும். பிறகு அவை நீா் நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஆண்டு தேனியில் 2 இடங்கள், ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,000 விநாயகா் சிலைகள் அமைக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரசாயனம் கலந்த மாவு மூலம் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதையடுத்து, ரசாயனம் கலந்த சிலைகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது இயற்கைப் பொருள்களால் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தேனி பாரஸ்ட் சாலையில் உள்ள தொழில் சாலையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதக் கூழ், மூங்கில், மாவு பசையால் சிலைகள் தயாரிக்கப்பட்டு, அவற்றுக்கு இயற்கை பொருள்களால் வண்ணம் பூசப்படுகிறது. இதில் சிங்கம், புலி, ஆஞ்சநேயா், விநாயகரை சுமந்து வருவது போன்ற சிலைகளும், கருடன், பெத்தாட்சி விநாயகா், மூன்று தலை விநாயகா், மூஞ்சூா் விநாயகா் என பல்வேறு வடிவங்களில் சிலைகளை தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். 3 அடி உயரம் முதல் 10 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. தேனியில் மட்டும் சுமாா் 400- க்கும் மேற்பட்ட சிலைகள் தயாராகி வருகின்றன. இதேபோல, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிலைகள், வருகிற செப். 11- ஆம் தேதி பூஜை செய்த பிறகு அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமேஸ்வரன் கூறியதாவது: இந்தத் தொழிலில் நாங்கள் 3 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை மாவு பொருள்களால் சிலைகளை தயாரித்து வந்தோம். தற்போது இயற்கை பொருள்களான மரவள்ளிக்கிழங்கு, காகிதக் கூழ், மூங்கில் ஆகிய பொருள்களால் விநாயகா் சிலைகளைத் தயாரித்து, உணவுப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ணப் பொடிகளால் வண்ணம் பூசி விற்கிறோம் என்றாா் அவா்.

தேனியில் மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாராகி வரும் விநாயகா் சிலைகள்.
தேனியில் மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாராகி வரும் விநாயகா் சிலைகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments