ஆரணி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: காதலன் தற்கொலை முயற்சி
ஆரணி அருகே சனிக்கிழமை பிற்பகலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், காதலன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி அருகே சனிக்கிழமை பிற்பகலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், காதலன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம், இ.பி.நகரைச் சேர்ந்த வேலு, ரேணுகா தம்பதியருக்கு விமல் என்ற மகனும், சவுமியா (17) என்ற மகளும் உள்ளனர். வேலு இறந்து விட்டார். இதனால் ரேணுகா விமலையும், சவுமியாவையும் வளர்த்து வந்தார்.
விமல் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சவுமியா 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் சவுமியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதையடுத்து, அவரது உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை ரேணுகா செய்தார். சவுமியாவின் பாட்டி கவுரி மற்றும் உறவினர்கள் ஆரணி பெரிய சாயக்கார தெருவில் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு சனிக்கிழமை இரவு 8 மணிக்குத்தான் சவுமியா இறந்த தகவலை ரேணுகா கூறினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த கவுரி மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று சவுமியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது, சவுமியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ரேணுகா கூறிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் கவுரி சந்தேகமடைந்தார்.
இதையடுத்து, பேத்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் உறவினர்கள் சிலருடன் சென்று கவுரி புகார் அளித்தார். போலீஸார் புகார் மனுவை பெறாமல் இழுத்தடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கவுரி ஞாயிற்றுக்கிழமை காலையில் உறவினர்களுடன் சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து, போலீஸார் புகார் மனுவை பெற்றுக்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, சனிக்கிழமை இரவு சவுமியாவின் மாமனும், காதலனுமான நெசல் கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன் (20) சவுமியா தூக்கில் தொங்கிய அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம்.
அவரை உறவினர்கள் மீட்டு, தீவிரச் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சவுமியா ஏன் தற்கொலை செய்தார், காதலன் திடீரென தற்கொலைக்கு முயன்றது ஏன், சவுமியாவின் தாய் தகவலை மறைத்தது ஏன் என்பது உள்பட பல்வேறு சந்தேகங்கள் நிலவும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.