FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கேரளத்துக்கு ரூ.63 லட்சம் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், 6 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:49 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், 6 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், நிவாரணப் பொருள்கள் சேகரிக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர்கள் மூலம் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
திருவண்ணாமலை கோட்டத்தில்...: திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தில் ரூ.27 லட்சத்து 83 ஆயிரத்து 386 மதிப்பிலான 535  நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
செய்யாறு, ஆரணி கோட்டங்களில்..: இதேபோல, செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் ரூ.24 லட்சத்து 45 ஆயிரத்து 137 மதிப்பிலான 7,363 நிவாரணப் பொருள்களும், ஆரணி வருவாய்க் கோட்டத்தில் ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 470 மதிப்பிலான 10,939 நிவாரணப் பொருள்களும் சேகரிக்கப்பட்டன.
ஆக மொத்தம், ரூ.63 லட்சத்து 43 ஆயிரத்து 993 மதிப்பிலான 18,837 நிவாரணப் பொருள்களை 6 லாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.ஜானகி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு நிவாரணப் பொருள்கள் ஏற்றிய லாரிகளை வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேரள மக்களுக்குத் தேவையான அரிசி, துவரம் பருப்பு, தண்ணீர் புட்டிகள், மளிகைப் பொருள்கள், துணி வகைகள், மெழுகுவர்த்தி, நாப்கின், மருந்து வகைகள் உள்பட மொத்தம் ரூ.63.44 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் சீ.தங்கவேலு, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆரணி, செய்யாறு கோட்டாட்சியர்களிடம் பொதுமக்கள், பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களை வட்டாட்சியர்கள் ஒப்படைத்
தனர். பின்னர், அவை அனைத்தும் ஆட்சியர் அலுவலகம் கொண்டுவரப்பட்டு கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆரணியில்...: ஆரணி நெல் அரிசி வியாபாரிகள் சங்கம், ஆரணி வணிகர் சங்கம் மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம், ஆரணி நகர அனைத்து வணிகர்கள் சங்கம்,  பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கம், சிறு, குறு, பெரு வாணிபம் செய்வோர் நலச் சங்கம், ஆரணி வட்ட செல்போன் ரீசார்ஜ் சங்கம், இ.எஸ்.பி. குரூப்ஸ், ஆரணி காய்கனி சந்தை சார்பில், ஆரணி கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை ஒப்படைத்தனர்.
சேத்துப்பட்டில்...: சேத்துப்பட்டு திவ்யா கல்வி குழுமத் தலைவரும், அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவருமான பா.செல்வராசன், ரோட்டரி சங்கம், எவர்கிரின் அரிமா சங்கம், வாசவி கிளப் சார்பில், சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அரிதாஸிடம் வழங்கப்பட்டன. இதனை வட்டாட்சியர் செய்யாறு கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.
போளூரில்...: போளூர் வட்டாட்சியர் தியாகராஜனிடம் போளூரைச் சுற்றியுள்ள வியாபாரிகள், ரோட்டரி சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், தனி நபர்கள் ஆகியோர் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கினர். இவற்றை  வட்டாட்சியர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments