தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டிய போலி போலீஸ் கைது! நகை, பணம் பறித்தது அம்பலம்!
தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டிய போலி போலீஸ் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
வாழப்பாடி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் எனக் கூறி, இளைஞர்கள், இளம்பெண்களைக் குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த ஜூன் 10-ஆம் தேதி இவரது நண்பருடன் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள நந்தி கோவிலுக்கு சென்றுள்ளார்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேசஞ்சாவடி அருகே சென்றபோது ’டிப் டாப்’பாக உடையணிந்த இளைஞர் ஒருவர் தன்னை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஏன் தலைக்கவசம் போடவில்லை என்று மிரட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
அந்த ஆண் நண்பர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு, காவல் உதவி ஆய்வாளரைக் காண வருமாறு, அவரை அழைத்துச் சென்று வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு சாலையில் இறக்கி விட்டுள்ளார்.
இதனிடையே, சேசஞ்சாவடியில் நின்றிருந்த அந்தப் பெண் ஆசிரியையிடம் சென்ற அந்த டிப்டாப் இளைஞர், அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் அவர் கையில் வைத்திருந்த ஆண் நண்பரின் அரைப் பவுன் மோதிரம் ஆகியவற்றை வாங்கி தனது சட்டை பையில் வைத்துக்கொண்டு, அவர் மின்னல் வேகத்தில் பறந்து சென்றார்.
இதுகுறித்து அந்தப் பெண் ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதே பாணியில், தஞ்சாவூர் பகுதியில் ஒரு பெண்ணிடம் டிப்டாப் உடை அணிந்த போலி போலீஸ் ஒருவர், தங்க நகைகளைப் பறித்த வழக்கில், தஞ்சாவூர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரைப் பிடித்து தஞ்சாவூர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சின்னகாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் (44) என்பதும், தன்னை போலீசார் எனக் கூறி, வாழப்பாடி தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இளம்பெண்கள், இளைஞர்களை குறிவைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், போலி போலீஸ் சிவராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை தஞ்சாவூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சையத் முபாரக், உதவி ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் தஞ்சாவூர் சென்று, சிறையில் இருந்த சிவராமனை போலீஸ் காவலில் எடுத்து வாழப்பாடியில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர், பேளூர் தனியார் பள்ளி ஆசிரியிடம் தங்க நகை பறித்தது உறுதியானது.
தமிழ்நாடு முழுவதும் தன்னை போலீஸ் என்று கூறி இதே பாணியில் பலரிடம் நகைகளை கொள்ளையடித்ததும் உறுதியானது. சிவராமன், வாழப்பாடி தனியார் பள்ளி ஆசிரியையிடம் கொள்ளையடித்த மூன்றரை பவுன் தங்க நகையை அவரிடமிருந்து வாழப்பாடி போலீசார் மீட்டனர். பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த போலி போலீஸ் சிவராமன் மீது, தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் தங்க நகைகளை பறித்ததாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Fake police officer who operated across Tamil Nadu arrested - Theft of jewelry and cash exposed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.