சான்று வழங்குவதில் காலதாமதம்: கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
செய்யாறில் சொத்து ஜாமீன் படிவ சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறில் சொத்து ஜாமீன் படிவ சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு வட்டம், பைங்கினர் கிராமம் பாரிநகர் பகுதியில் வசிப்பவர் கே.சாகுல்அமீர். இவரது மகன் முஸ்தபா. இவர், சிலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்து வருகிறார்.
இவரை பிணையில் எடுக்க கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சொத்து ஜாமீன் சான்று கோரி மனு அளித்து இருந்ததாகத் தெரிகிறது.
அந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சொத்து ஜாமீன் சான்று வழங்கியுள்ளார். பிற மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் சான்றை வட்டாட்சியர் சரி பார்த்து உறுதி செய்து கையொழுத்திட்டு வழங்க வேண்டும் என்பது அரசாணையாகும். இந்தச் சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
காலதாமததைக் கண்டித்து சாகுல் அமீர் மற்றும் உறவினர்கள் சுமார் 50 பேருடன் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த செய்யாறு வட்டாட்சியர் க.மகேந்திரமணி சுமார் 7.00 மணியளவில் அலுவலகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் அளித்த சான்றில் கையெழுத்திட்டு முத்திரையிட்டு வழங்கினார். சான்று பெற்ற பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.