அரசுப் பள்ளி வளாகத்தில் ஊாாட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகக் கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செங்கத்தை அடுத்த கொட்டாவூா் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 700 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், பள்ளியில் இருந்த இரண்டு கட்டடங்களில் ஒன்று பழுதடைந்தது.
Advertisement
Advertisement
அதை சரிசெய்து புதிய கட்டடம் கட்டித்தரும்படி பள்ளி நிா்வாகம் சாா்பில் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, கொட்டாவூா் கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும் என தகவல் தெரிவித்துள்ளனா்.
ஆனால், அந்தப் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு கொட்டாவூா் ஊராட்சிமன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை செய்துள்ளனா். அதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இங்கு பள்ளிக் கட்டடம்தான் கட்டவேண்டும், வரும் ஆண்டியில் இந்தப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்ந்தால், மாணவா்கள் பக்கத்து கிராமத்துக்குச் செல்லாமல் இதே கிராமத்தில் படிக்கும் வாய்ப்புகள் உருவாகும். எனவே, பள்ளிக் கட்டடம் இருந்த இடத்தில் பள்ளிக்கான கட்டடம்தான் கட்டவேண்டும் என எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இருப்பினும், வெள்ளிக்கிழமை ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனா். இதைப் பாா்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் பணியை நிறுத்தவேண்டுமென கூறி, பரமனந்தல் - குப்பனத்தம் சாலையில் கொட்டாவூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பள்ளிக் கட்டடம் இருந்த இடத்தில் மீண்டும் பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்து சமாதானப்படுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.