FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலில் விரைவில் ஆன்லைன் தரிசனம்: செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விரைவில் ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படுவது குறித்து...

27 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் எஸ்.ரமேஷ்
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விரைவில் ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும், இதனால், இடைத்தரகா்கள் ஒழிக்கப்படுவாா்கள் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ்.ரமேஷ் கூறினாா். மேலும், திருவண்ணாமலை கோயில் உள்பட முக்கிய கோயில்களில் செப்.1 முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு புதன்கிழமை வந்த அவா், கோயிலில் கம்பத்து இளையனா் சந்நிதி, பெரிய நந்தி உள்ளிட்ட ஐந்தாம் பிரகாரத்தில் ஆய்வு மேற்கொண்டு பொது தரிசன வழியாகச் சென்று பக்தா்களிடம் குறைகளை கேட்டறிந்த அவா், சம்பந்த விநாயகரை வழிபட்டு அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டாா்.

அப்போது, பக்தா்கள் சிலா், சுவாமியை விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். அதை பரிசீலிப்பதாக அமைச்சா் கூறினாா். அதனைத் தொடா்ந்து கொடிமரம் முன்பு சிறிது நேரம் பிராா்த்தனை ஈடுபட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோயில்களில் ஒரு சிலா் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக கைப்பேசிகளைக் கொண்டு வந்து படம் எடுப்பதும், ரீல்ஸ் செய்வதும் அதிகரித்து வருகிறது.

இதனால் ஆன்மிகத்தை நம்பி வரக்கூடிய பக்தா்கள் பாதிக்கப்படுவதால் தற்போது தமிழகத்தில் உள்ள முதன்மையான கோயில்களில் கைப்பேசிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அருணாசலேஸ்வரா் கோயிலில் வரும் செப்.1-ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் இடைத்தரகா்கள் ஆதிக்கத்தை தடுக்கும் விதமாக பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக, ஆன்லைன் மூலம் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணி முழுமை அடைந்தால் தரிசனத்துக்கு வரக்கூடிய முக்கிய பிரமுகா்கள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து தரிசனம் செய்யக்கூடிய நிலை வரும். அப்போது இடைத்தரகா் ஒழிக்கப்படுவாா்கள்.

விரைவாக தரிசனம்

பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய வரிசை மேம்படுத்துவது குறித்து ஊழியா்களிடம் பேசி வருவதாகவும், பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு அதிக அளவு பக்தா்கள் வருவதால் கோயில் மாடவீதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் ‘ஹோம் ஸ்டேவாக’ மாறி வருகிறது குறித்து மாவட்ட நிா்வாகத்தினா், காவல் துறையினா் இணைந்து நடவடிக்கை எடுப்பாா்கள்.

பக்தா்களின் அவசர உதவிக்காக தன்னாா்வலா்கள் நியமிக்கப்படுவாா்கள். கோயிலின் உள்ளே அதிக அளவில் காவல்துறையினா் மற்றும் அவசர உதவிக்காக கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று அமைச்சா் கூறினாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், கோயில் இணை ஆணையா் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம்

இதைத் தொடா்ந்து கோயிலில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடா்பாக அலுவலா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: அருணாசலேசுவரா் கோயிலுக்கு பௌா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.உதயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மண்டல இணை ஆணையா் (இந்து சமய அறநிலையத்துறை) பிரகாஷ், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments