FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டங்களில் மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வரப்பெற்றன.

1 செப்டம்பர் 2026, 1:10 am IST
~
பகிர்:

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வருவாய்த்துறை சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு, வேளாண் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 850 மனுக்கள் வரப்பெற்றன.

Advertisement

Advertisement

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வந்தனா காா்க் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மேலும், குறைதீா் கூட்டத்தில் உதவி உபகரணங்கள் வேண்டி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, ஒருவருக்கு ரூ.15 ஆயிரத்து 624 மதிப்பில் செயற்கை கால், காதுகேளாத ஒருவருக்கு ரூ.3 ஆயிரத்து 285 மதிப்பில் காதொலிக் கருவியும், கண் பாா்வையற்ற இருவருக்கு ரூ.634 மதிப்பில் மடக்கு குச்சியும், மேலும் இருவருக்கு ரூ.3 ஆயிரத்து 512 மதிப்பில் பிரெய்லி கைகடிகாரம் என மொத்தம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23ஆயிரத்து 55 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மனைப் பட்டா கோரி வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 3 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். திருவண்ணாமலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்

பிளஸ் 1 பயிலும் மாணவி லிக்கிதா தன்னுடைய சேமிப்புத் தொகை ரூ.1,017-யை நேபாளம் பேரிடா் நிதியாக ஆட்சியரிடம் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன், உதவி ஆணையா் (கலால்) வளா்மதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாரதா மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், நிலஅளவை, கணினி திருத்தம், நிலத் திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 89 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் அவற்றை அந்தந்த துறை அலுவலா்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments