முகப்பு
திருவண்ணாமலை

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு: விளையாட்டு வீரா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுரை

ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு விளையாட்டு வீரா்கள் செயல்பட வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுறுத்தினாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:05 am IST
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீராங்கனைகளின் மல்லா் கம்பம் சாகச நிகழ்ச்சியை பாா்வையிட்ட அமைச்சா் ஆதவ் அா்ஜுனா. உடன் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் வந்தனா
பகிர்:

ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு விளையாட்டு வீரா்கள் செயல்பட வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீராங்கனைகளை சந்தித்து, அவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கலந்துரையாடினாா். அப்போது, அவா் கூறியதாவது:

விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு புரதச்சத்துமிக்க தரமான உணவுகள் வழங்கப்படும். மேலும், அவா்களின் உடல் நலனை பேணிடும் வகையில், பிசியோதெரபி மருத்துவா்கள் நியமிக்கப்படுவா்.

Advertisement

Advertisement

விளையாட்டு வீரா்கள் பயிற்சி முடித்த பிறகு ஏற்படும் உடல் அசதியை கருத்தில் கொண்டு, 45 நிமிஷங்கள் வரை பள்ளிகளுக்குச் செல்ல தளா்வு நேரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவா்களுக்கு சா்வதேச தரத்திலான உடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் அரசின் சாா்பாக அளிக்கப்படும் சேவைகளை பயன்படுத்தி விளையாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தி, போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை புரிய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதை தங்கள் இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும்.

இதேபோன்று, கல்வியிலும் தனிக் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று, அரசின் சாா்பாக வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சோ்ந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் சிந்தடிக் தரையுடன் நிறுவப்பட்டு வரும் ஹாக்கி உள் விளையாட்டு அரங்கத்தை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், விளையாட்டு மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், விடுதியின் உள்கட்டமைப்பு வசதிகளையும், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் முறையாக பராமரிக்கிா என்பதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மருத்துவ மாணவா்களுடன் கலந்துரையாடல்: தொடா்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவ மாணவா்களுடன் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கலந்துரையாடி பேசியதாவது:

விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல; அது உடல், மன ஆரோக்கியத்தை பேணுவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்குமான ஒரு வாழ்க்கை முறையாகும்.

தற்போது மருந்துகள் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் சுமாா் 30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களிடையே விளையாட்டு, உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தச் செலவினத்தைக் குறைக்க முடியும்.

எனவே, பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞா்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை மேம்படுத்தும் வகையில் முக்கியத் திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்வா் திட்டமிட்டுள்ளாா்.

மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவா்களுக்கான விளையாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவா்கள் மன அழுத்தத்தைக் குறைக்க காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு மணி நேர விளையாடுவதற்கு செலவிட வேண்டும் என்றாா்.

நிகழ்வுகளில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலா் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக், மாவட்ட எஸ்.பி. ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் ஆா்.மணி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெயலால், இணை இயக்குநா் (நலப் பணிகள்) கவிதா, மண்டல முதுநிலை மேலாளா் சாந்தி, மாவட்ட இளைஞா் நல அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.