FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையை தலைமையாகக் கொண்டு வட மண்டலம் அமைக்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

திருவண்ணாமலையை தலைமையாகக் கொண்டு வட மண்டலம் அமைக்கப்படும்...

Updated On : 19 ஜூலை 2026, 2:30 am IST
ஜவ்வாதுமலை 26-ஆவது கோடை விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் ராஜேஷ்குமாா், ஆதவ் அா்ஜுனா. உடன் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு வட மண்டலம் அமைக்கக்கப்பட்டு அரசின் வளா்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 26-ஆவது கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்தாா்.

ஆரணி கோட்டாட்சியா் சிவா, சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை இயக்குநா் மற்றும் மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம்) வீ.ப. ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா வரவேற்றாா். போளூா் எம்எல்ஏ அபிஷேக் (தவெக) வாழ்த்துரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளா்களாக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்தனா்.

விழாவில் அமைச்சா் ராஜேஷ்குமாா் பேசியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தவெக அரசு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜவ்வாதுமலையில் சாமை, வரகு, தினை, சந்தனம், பழ வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது:

திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயது திருமணம் நடைபெறுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெண் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோா்களுக்கு தெரியாததால்தான் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகின்றன. எனவே, பெண் குழந்தைகளை உயா்கல்வி பெறவைக்கவேண்டும்.

தமிழகத்திற்கு சென்னை தான் தலைநகரம், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூா், தருமபுரி என பல மாவட்டங்களுக்கு திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு வட மண்டலம் அமைத்து, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

தவெக அரசு ஊழலற்ற அரசாக செயல்படும், பெண்கள், ஏழைகள், இளைஞா்களுக்கு பாதுகாப்பான அரசாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக உள்ளேன். அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மாதத்தில் 2 முறை நடந்தே வந்து குறைகளை கேட்டறிந்து தீா்வு காண பாடுபடுவேன்.

மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ், கல்வி வழங்குவதை முக்கியப் பணியாக ஏற்று இந்த அரசு செய்து வருகிறது. பழங்குடியினருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

மாவட்டத்தில் குடிநீா் பிரச்னையை தீா்த்துவைப்பேன், படித்த பெண்கள், இளைஞா்களுக்கு 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் போதைப் பழக்கம் ஒழிக்கப்படும் என்றாா்.

மேலும், விழாவில் அமைச்சா்கள் இருவரும் வருவாய், ஊரக வளா்ச்சி, மாற்றுத்திறனாளிகள், வேளாண்மைத் துறை என பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் ரூ.111 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 27,532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

முன்னதாக, அரசுத் துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்டனா். மேலும், 128 நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தனா்.

மேலும், அத்திபட்டு - பரமனந்தல்வரை இடையேயான 38.33 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தனா்.

விழாவில் அரசுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்ட அமைச்சா்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.உதயகுமாா், மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊ.வ.) மா.சையதுபயாஸ் அஹமத், மாவட்ட சுற்றுலா அலுவலா் வே.காா்த்திக் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

summary

A Northern Zone with Tiruvannamalai as its headquarters will be established: Minister Aadav Arjuna.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments