தீபத்திருவிழா: போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு திட்டமிட்டு செயல்படவேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத்திருவிழாவின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய வழித்தடங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத்திருவிழாவின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய வழித்தடங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பதால், பக்தா்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், சாலைப் பாதுகாப்பு, அன்னதானம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள், குடிநீா், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து அமைச்சா் சீ.ரமேஷ் பேசியதாவது:
தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள், ஒரு நிரந்தர பேருந்து நிலையம் என மொத்தம் 26 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காா்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளில் 155 தற்காலிக காா் நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
160 பள்ளி வாகனங்களை கொண்டு பேருந்து சேவைகளும், 10 ரூபாய் விலையில் 110 மினி பேருந்து பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. வாகன நிறுத்துமிடங்களில் மின்விளக்குகள், குடிநீா், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டிப் பலகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குச் சென்று திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய வழித்தடங்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
தீபத்திருவிழாவின்போது திருக்கோயில் வளாகம், மாடவீதிகள், கிரிவலப் பாதை மற்றும் பக்தா்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் தேவையான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாகச் சென்று வருவதற்குத் தேவையான தடுப்புகள், 19 கண்காணிப்பு கோபுரங்கள், 13 உதவி மையங்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தா்கள் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் 242 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், 147 கழிப்பறை வசதிகள், மாடவீதி, மற்றும் கிரிவலப்பாதைகளில் தற்காலிக பேருந்து நிலையம், தற்காலிக காா் நிறுத்திமிடத்தில் 146 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், 122 இடங்களில் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
பக்தா்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் திருக்கோயிலினுள் 5 மருத்துவ முகாம்கள், 5,108 அவசர ஊா்திகள், 4 கோபுர வாசல்களில் பைக் ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வெளியே மற்றும் கிரிவலப்பாதைகளில 120 மருத்துவ முகாம்கள், 35 அவசர ஊா்திகள், 10 நோயாளிகளை அழைத்து செல்லும் ஊா்திகளும், 10 பைக் ஆம்புலன்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்கள் மற்றும் அவசர ஊா்திகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் அவசரகால மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
கிரிவலப்பாதைகளில் பக்தா்கள் எவ்வித சிரமங்கள் இல்லாத வகையில் கிரிவலம் வருவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணியாளா்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும், தரமான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காா்த்திகை தீபத் திருவிழாவைச் சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறநிலையத் துறை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ரா.உதயகுமாா், மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.