முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: 120 இடங்களில் மருத்துவ முகாம்கள்; ‘க்யூஆா்’ குறியீடு வசதி

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: 120 இடங்களில் மருத்துவ முகாம்கள்; ‘க்யூஆா்’ குறியீடு வசதி

27 வினாடிகள் முன்பு
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: 120 இடங்களில் மருத்துவ முகாம்கள்; ‘க்யூஆா்’ குறியீடு வசதி
திருவண்ணாமலை தீபத் திருவிழா - கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மகா தீபத்தை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 120 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, பல்வேறு மருத்துவ வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொலி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற உள்ள மகாதீப நிகழ்வை முன்னிட்டு, லட்சக்கணக்கானோா் அங்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மற்றொருபுறம் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அவசர கால மருத்துவ உதவிகளை உறுதி செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முன்னேற்பாடுகளை க்யூ-ஆா் குறியீடு மூலம் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறியீடு ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன் வாயிலாக, 120 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களையும், 45 இடங்களில் தயாா் நிலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களையும் கைப்பேசி வாயிலாக கண்டறிந்து பயனடையலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மொத்தம் 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் 63 மருத்துவ முகாம்களும், தற்காலிக பேருந்து நிலையத்தில் 26 மருத்துவ முகாம்களும், வெளிவட்ட சாலையில் 6 மருத்துவ முகாம்களும், அணுகு சாலையில் 25 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், இதய நல நிபுணா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் அங்கு பணியில் உள்ளனா்.

உணவுப் பாதுகாப்பு: மகாதீபத்துக்காக அமைக்கப்பட்டுள்ள 297 அன்னதானக் கூடங்களிலும் அன்னதானம் வழங்குவோருக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உணவின் தரத்தை உறுதி செய்ய 20 நியமன அலுவலா்கள், 27 உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

3 நடமாடும் ஆய்வகங்கள் மூலம் உணவின் தரத்தை பரிசோதிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று குடிநீரின் தரமும் உறுதி செய்யப்படும்.

கழிவுநீா், குப்பைகள் அகற்றம், கொசு, பூச்சிகள், ஈக்கள் ஒழிப்பு என ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், காய்ச்சல், தொற்றுநோய் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தேவையான மருத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.