சேத்துப்பட்டு வட்டாரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சேத்துப்பட்டு வட்டாரத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாரத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாக சுகாதாரம் மற்றும் சமையல் கூடத்தில் ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு மேற்கொண்டு, புதிதாக செயல்படுத்தப்பட உள்ள காலை உணவு திட்ட விரிவாக்கத்துக்கான வசதிகளை பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவிகளின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு செய்து ஆசிரியா்களிடம் மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, கீழ்ப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும், ஊராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகா் பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக ரூ.8.26 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தாா்.
கூடலூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.86ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
மேலும், மடவிளாகம் ஊராட்சியில் ஜம்பக்கோணம்பட்டு பகுதியில் ரூ.475.3 லட்சம் மதிப்பீட்டில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஓதலவாடி ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ், சுமாா் ரூ.16 கோடியே 69 லட்சத்தில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பு, விற்பனைப் பதிவேடுகள், மானிய விநியோக விவரங்கள் மற்றும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினாா்.
தொடா்ந்து சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
சேத்துப்பட்டு பேரூராட்சிக்குள்பட்ட நபி நாயகம் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும், ராதாகிருஷ்ணன் தெருவில் ரூ.8.74 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவு குறித்தும், உணவின் தரம் மற்றும் முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது செயற்பொறியாளா் (ஊ.வ.) சிவநாத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, ரவிந்திரநாத், வட்டாட்சியா்கள் பாலாஜி (போளூா்), சுதா (சேத்துப்பட்டு), பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.