சுகாதாரச் சீர்கேட்டில் பேருந்து நிலையங்கள்
வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கழிவறைகள் பொதுமக்களின் சுகாதாரத்தைக் காப்பதற்காக கட்டணமில்லா கழிவறைகளாக
வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கழிவறைகள் பொதுமக்களின் சுகாதாரத்தைக் காப்பதற்காக கட்டணமில்லா கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும் என்பது நகர் நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் புதிய பேருந்து நிலையத்தில் 6 கட்டணக் கழிவறைகள், இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் இரண்டு, மாற்றுத்
திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் இரண்டு ஆகியன உள்ளன.
Advertisement
Advertisement
இவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன. இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் திறந்த நிலையில் உள்ளதோடு,
தண்ணீர் இன்றியும், பராமரிப்பு இன்றியும் இருப்பதால், சுற்றுப் பகுதியில் மூக்கைத் துளைக்கும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
6 கட்டணக் கழிப்பிடங்களில் இரண்டில் மட்டுமே மின் மோட்டார் மூலம் தண்ணீர்த் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.
பிற 4 கட்டணக் கழிப்பிடங்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வெளியிடங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
இத்தகைய சூழலில் கட்டணக் கழிப்பிடங்களில் சுகாதாரம் பேணப்படவில்லை. அத்துடன் அவை நீண்டகாலமாக பராமரிப்பின்றி உள்ளதால் கதவுகள் சரியில்லை,
தாழ்ப்பாள் இல்லை, கழிவறையை அச்சத்தோடு பயன்படுத்தும் அளவுக்கு பல சீர்கெட்டுள்ளன.
இதே நிலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இரு கட்டணக் கழிப்பிடங்களிலும் உள்ளன.
ஆண்களுக்காவது இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. பெண்களுக்கு அதுவும் இல்லை.
இலவசக் கழிப்பிடங்களில் சுகாதாரம் பேணாதது, கட்டணக் கழிப்பிடங்களில் பராமரிப்பின்மை, தண்ணீர்த் தட்டுப்பாடு, அதிகக் கட்டணம் வசூல் போன்ற காரணங்களால் பேருந்து நிலையத்தின் பல இடங்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்களாக மாறிவிட்டன.
இதனால் பேருந்து நிலையத்தினுள் நுழையும் பேருந்துகளில் பயணம் செய்வோர் மூக்கைப் பிடித்துக் கொள்ளும் நிலை உள்ளது.
இந்தக் கட்டணக் கழிப்பிடங்கள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டு வரும் நிலையில், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் மாநகராட்சிக்கு பெரிய அளவில் உதவுவதாகவும் இல்லை.
சென்னையைப் பின்பற்றலாமே!
சென்னையில் புறநகர்ப் பேருந்துகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட
கழிப்பிடங்கள் முதல்முறையாக தமிழகத்தில் இலவசக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன.
பேருந்து நிலைய வளாகத்தில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கும் அவலம் இதன் மூலம் முடிவுக்கு வந்தது.
இத்தகைய முடிவை வேலூர் மாநகராட்சி எடுத்து புதிய, பழைய பேருந்து நிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் நேரடியாக பராமரிப்பை
மேற்கொண்டு, இலவசக் கழிப்பிடங்களாக மாற்றுவதன் மூலம், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க முடியும் என்கின்றனர் நகர்நல ஆர்வலர்கள்.
"முயற்சி மேற்கொள்ளப்படும்'
இதுதொடர்பாக மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினியிடம் கேட்டபோது, "மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாய் இனங்களில் ஒன்றாக வேலூர் புதிய, பழைய
பேருந்து நிலையங்களின் கட்டணக் கழிப்பிடங்கள் உள்ளன.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணவும், மேம்படுத்தப்பட்ட நகராக வேலூரை மாற்றவும் எடுக்கப்படும் புதிய முயற்சிகளில் ஒன்றாக இந்த கட்டணக்
கழிப்பிடங்களை இலவசக் கழிப்பிடங்களாக மாற்ற முயற்சி எடுக்கப்படும்.
மாநகராட்சி நிர்வாகத்தால் நேரடியாக இந்தக் கழிப்பிடங்களை பராமரிக்க இயலாத அளவுக்கு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால் இவற்றைப் பராமரிக்க
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், லாபநோக்கமற்ற தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வரும் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் இதற்கான முடிவுகள் கொண்டு
வரப்படும்.
இதில் மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதால், அவர்களின் ஒருமித்த கருத்தையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் மேயர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.