இலவச பேருந்து அட்டை குளறுபடியால் மாணவர்கள் அவதி
திருப்பத்தூர் பகுதியில் இலவச அரசுப் பேருந்து அட்டை தொடர்பாக ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூர் பகுதியில் இலவச அரசுப் பேருந்து அட்டை தொடர்பாக ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
தொலைவில் இருந்து வரும் ஏழை மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் இலவச பேருந்து அட்டை வழங்கப்படுகிறது. 2018-2019-ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தின்போது, பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக ஜூலை 31-ஆம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையைக் கவனித்து, அவர்களிடம் பேருந்துக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி (புதன்கிழமை) திருப்பத்தூர் சுற்றுப் பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவர்களிடம் பேருந்து நடத்துநர் கட்டணம் வசூலித்ததாகவும், சில பேருந்துகளில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து நடத்துநர் ஒருவரிடம் கேட்டதற்கு, இலவச அட்டை குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், பேருந்து பணிமனையில் இலவசப் பேருந்து அட்டை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஏதும் ஒட்டப்படவில்லை என்றார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸிடம் கேட்டதற்கு, முதலில் ஜூலை 31-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களின் சீருடைகளைக் கவனித்து கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ஆணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.