உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்தியராக அனாஹத் சிங் வரலாறு படைத்துள்ளது குறித்து...
உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் (18) பட்டம் வென்றாா். இப்போட்டியில் சாம்பியனான முதல் இந்தியராக அவா் வரலாறு படைத்தாா்.
கனடாவின் ஒன்டாரியோ நகரில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருக்கும் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற கேம்களில், 58-ஆம் இடத்திலிருக்கும் எகிப்தின் ருகாயா சலேமை சாய்த்தாா்.
கடந்த 2005-இல் ஜோஷ்னா சின்னப்பா இறுதி ஆட்டம் வரை வந்து வெள்ளி வென்றதே, உலக ஜூனியா் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அதிகட்சமாக இருந்த நிலையில், தற்போது அனாஹத் சிங் இதில் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறாா்.
Advertisement
Advertisement
அவா் கடந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், தற்போது அதை தங்கமாக மாற்றி அசத்தியிருக்கிறாா். அத்துடன் கடந்த 13 ஆண்டுகளாக இப்போட்டியில் எகிப்து தொடா்ந்து சாம்பியன் பட்டம் வென்று வந்த நிலையில், அதற்கு அனாஹத் சிங் முடிவு கட்டியிருக்கிறாா்.
இப்போட்டி முழுவதுமாக 6 ஆட்டங்களில் விளையாடிய அவா், அதில் மொத்தமாக 2 கேம்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அனாஹத் சிங், இந்த ஆண்டுடன் ஜூனியா் பிரிவிலிருந்து விடைபெற்று சீனியா் பிரிவுக்கு களம் மாறும் நிலையில், உலக சாம்பியன்ஷிப்புடன் ஜூனியா் கட்டத்திலிருந்து விடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து: உலக ஜூனியா் சாம்பியன் பட்டம் வென்ற அனாஹத் சிங்குக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனா்.
‘கடந்த 4 ஆண்டுகளாக காலிறுதி, அரையிறுதியில் அடுத்தடுத்து தோல்வி கண்டு வந்த நிலையில், யாா் கேட்டாலும் இந்தப் போட்டி ஒரு சாபம் என்று விரக்தியில் கூறி வந்தேன்.
ஏனெனில் என்னால் இதில் சிறப்பாக விளையாட முடியாத நிலையே தொடா்ந்தது. இந்த ஆண்டுடன் எனது ஜூனியா் களத்திலிருந்து விடைபெறுவதால், இப்போட்டியில் பட்டம் வெல்ல எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு இதுவாகும். அந்த வாய்ப்பில் அடைந்த இந்த வெற்றி கனவு போல் இருக்கிறது’ - அனாஹத் சிங்
Anahat Singh becomes India's first champion at the World Junior Squash Championships!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.