கூட்டுக் குடும்ப முறை சிதைவால் தாய்ப்பால் குறித்த புரிதலில் மாற்றம்: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்
கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனிக்குடும்ப முறை அதிகரிப்பால் தாய்ப்பால் குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனிக்குடும்ப முறை அதிகரிப்பால் தாய்ப்பால் குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார். உலக தாய்ப்பால் வார விழா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவைத் தொடங்கி வைத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
நவீன கணினி உலகில் தற்போது கூட்டுக் குடும்ப முறை மாறி தனிக்குடும்ப முறை அதிக அளவில் உருவாகிவிட்டது. இந்தத் தனிக்குடும்ப முறையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் உடல் நலத்தில் மாற்றம் ஏற்படும் என தவறான கருத்துகளைக் கொண்டு தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். இந்த போக்கு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.
தாய்ப்பால் அளிப்பது இயற்கையாகவே மனிதர்கள், விலங்கினங்களில் நிகழ்ந்து வந்த ஒரு நிகழ்வாகும். ஆனால் மனித நாகரிகத்தால் தற்போது தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இவை முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் பிணைப்பு அதிகரிக்கும். தாய்மார்களுக்கு பிற்காலத்தில் கருப்பை புற்றுநோய் ஏற்படாது. மார்பகப் புற்றுநோய், பேறுகால உதிரம் குறைவு, பொருளாதார சேமிப்பு போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. நவீன மருத்துவ உலகில் கருவிலுள்ள குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தாயின் அசைவை வைத்தே நடக்கிறது. அப்படியிருக்க பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுத்திட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர், குழந்தைகள் நலத் துறைத் தலைவர் தோணிராஜன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் திருமால்பாபு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், குழந்தைகள் நலத் துறை இணைப் பேராசிரியர் தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.