பெண்களிடம் பல லட்சம் மோசடி: காவல் நிலையம் முற்றுகை
வாலாஜாபேட்டை சுற்றுவட்டாரத்தில் அப்துல் கலாம் படம் அச்சிட்டு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 1,500 பெண்களிடம் பல லட்சம்
வாலாஜாபேட்டை சுற்றுவட்டாரத்தில் அப்துல் கலாம் படம் அச்சிட்டு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 1,500 பெண்களிடம் பல லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் புதன்கிழமை, காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வாலாஜாபேட்டை புஜன்னர் தெருவில் "செவன்த் ஸ்டார்' மகளிர் சங்கம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களாக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தின் நிர்வாகிகளாக வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த அமீத், சென்னையைச் சேர்ந்த சிலர் உள்ளனர். இங்கு வாலாஜாபேட்டையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவரும், பாகவெளி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தச் சங்கத்தின் மூலம் மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அப்துல் கலாம் படம் அச்சிட்ட நோட்டீஸை வாலாஜாபேட்டை, ஆற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகம் செய்துள்ளனர். இதை நம்பிய அப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 1,500 பேரிடம் கடன் பெறுவதற்கு முன் பதிவுக் கட்டணமாக ரூ. 300-ம், காப்பீடு செய்ய ரூ. 1,500 என வசூலித்து அதற்கான ரசீதும் வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை (ஆகஸ்ட் 1) வாலாஜாபேட்டை அலுவலகத்தில் வைத்து கடன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் வாலாஜாபேட்டை, ஆற்காடு, புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாலாஜாபேட்டை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர்.
அப்போது, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் சங்க நிர்வாகி அமீத்தின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள் அலுவலகத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருள்களை உடைத்து சூறையாடினர். மேலும், அங்கிருந்த ஊழியர்கள் இருவரை பிடித்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், கடன் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ. 50 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்து தலைமறைவான நிர்வாகி அமீத் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து இழந்த பணத்தை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அலுவலக ஊழிர்கள் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.