FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

தங்க மங்கை சானு!

மீராபாய் சானுவின் வெற்றி என்பது இன்னொரு தங்கப் பதக்கம் அல்ல; தன்னுடைய இலக்கை நோக்கிய வெற்றி தாகத்துடன் கூடிய பயணத்தின் ஒரு பகுதி.

Updated On : 28 ஜூலை 2026, 6:15 am IST
தங்க மங்கை மீராபாய் சானு - X | Saikhom Mirabai Chanu
பகிர்:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியக் குழுவினர், பதக்கங்களை அள்ளிக் குவிக்காவிட்டாலும், சில சாதனைகளைப் படைத்து வருவது ஆறுதலளிக்கிறது. இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் பதக்கங்கள் அனைத்துமே பளுதூக்குதல் தொடர்பானவை மட்டுமே என்றாலும், நமது வீரர்கள் மூவர்ணக்கொடியைத் தூக்கிப்பிடித்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிதான்.

மாற்றுத்திறனாளியான "பாரா பவர் லிஃப்டர்' ஜண்டு குமார் 190 கிலோ எடையைத் தூக்கி வென்ற வெண்கலம், நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஞாயிறன்று இந்தியாவின் மீராபாய் சானு தங்கமும், ரிஷிகாந்த சிங் வெள்ளியும் பெற்றனர். அடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

மகளிர் பிரிவில் மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ என மொத்தமாக 190 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ என 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட ரிஷிகாந்த சிங், ஸ்னாட்ச் பிரிவில் 121 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 143 கிலோ என்று 264 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

Advertisement

Advertisement

மீராபாய் சானு பெற்றிருக்கும் நான்காவது காமன்வெல்த் போட்டிப் பதக்கம் என்பதுடன், தொடர்ந்து மூன்றாவது தடவையாக அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்பது தனிச்சிறப்பு. ஒரு வீரர் தொடர்ந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. அதனால்தான் இந்த வெற்றி தனிச்சிறப்புப் பெறுகிறது.

2014 கிளாஸ்கோ வெள்ளிப் பதக்கத்தைத் தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளில் மீராபாய் சானு ஒலிம்பிக் வெள்ளி, உலக சாம்பியன் வெற்றி, காயமடைதல், தனது பளுதூக்கும் பிரிவில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டது, பளு தூக்கும்போது நேரிடும் உடல் ரீதியிலான பிரச்னைகள் என்று பல சாதனைகளையும், வேதனைகளையும் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். புத்திசாலித்தனமான திட்டமிடல், விடாமுயற்சி மட்டுமல்லாமல் தளர்வில்லாத தொடர் முயற்சி (கன்சிஸ்டென்சி) மூன்றும்தான் மீராபாய் சானு வெற்றி வலம் வருவதற்கான காரணங்கள்.

அடுத்தகட்ட அதிக எடைப் பிரிவை நோக்கி நகராமல், இந்த காமன்வெல்த் போட்டியில் தெளிவான உத்தியுடன் சானு களமிறங்கினார். புதிய சாதனை படைக்க வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டாமல், தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கத்தைத் தக்க வைக்கும் சாதனையே போதும் என்று அவர் முடிவெடுத்தது புத்திசாலித்தனம். இந்தப் போட்டியை அடுத்து எதிர்கொள்ள இருக்கும் விளையாட்டுப் போட்டிக்கான தயாரிப்பாகத்தான் சானு கருதினார் என்று சொல்லத் தோன்றுகிறது.

வெற்றி என்பது வன்முனைப்பைப் போலவே (அக்ரஷன்) ஒரு விளையாட்டு வீரரின் நிதானத்திலும் (ரெஸ்ட்ரெய்ன்ட்) அடங்கி இருக்கிறது என்பதை பக்குவமடைந்த மீராபாய் சானு என்கிற வீராங்கனை நிரூபித்திருக்கிறார். அதேபோல, நமது இந்திய வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இப்போதெல்லாம் குறுகிய கால பாராட்டுகளையும், வெற்றியையும்விட தொடர் செயல்பாட்டில் கவனம் செலுத்துவதையும் பார்க்க முடிகிறது.

மீராபாய் சானுவைப் பொருத்தவரை, காமன்வெல்த் போட்டிகள் என்பது இலக்கல்ல; வெற்றிப் பாதையில் இன்னொரு மைல்கல் அவ்வளவே. ஏற்கெனவே ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம், உலக சாம்பியன்ஷிப் பட்டம், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றிருக்கும் மீராபாய் சானுவுக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றி என்பது இன்னும் கைக்கெட்டாமலேயே இருக்கிறது. கிளாஸ்கோவில் திட்டமிட்டுத் தனது எடைப் பிரிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததற்கு அதுவும்கூட ஒரு காரணம்.

ஒவ்வொரு வெற்றியும் அடுத்த இலக்கு நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்று வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் திட்டமிடுவார்கள். புதிய சாதனை படைப்பதைவிட, அடுத்த இலக்குக்கு தங்களது வலுவை மேம்படுத்திக் கொள்ளும் உத்தியில் கவனம் செலுத்துவார்கள். அதனால், சானுவின் வெற்றி என்பது இன்னொரு தங்கப் பதக்கம் அல்ல; தன்னுடைய இலக்கை நோக்கிய வெற்றி தாகத்துடன் கூடிய பயணத்தின் ஒரு பகுதி.

மீராபாய் சானு உள்ளிட்ட வீரர்களின் வெற்றிகள், ஒரு தர்மசங்கடமான கேள்வியை எழுப்புகின்றன. இந்தியாவின் தலைசிறந்த பளு தூக்கும் வீராங்கனையாக மீராபாய் சானு உயர்ந்து பத்தாண்டுகள் கடந்தும்கூட நாம் தங்கப் பதக்கத்துக்கு அவரைத்தான் நம்பி இருக்கிறோம். ஒலிம்பிக் இலக்குத் திட்டம், கேலோ இந்தியா முனைப்பு, தனியார் துறை ஆதரவு ஆகியவற்றுக்குப் பின்னும்கூட, இன்னும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் அளவுக்கு நம்மால் ஏன் வீரர்களையும், வீராங்கனைகளையும் அடையாளம் கண்டு உருவாக்க முடியவில்லை என்பதுதான் அந்தக் கேள்வி!

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்; அவ் வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

திருக்குறள் (எண் 596) அதிகாரம்: ஊக்கம் உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments