FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுதந்திர தின விழா:  ரூ.1.47 கோடிக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

சுதந்திர தினவிழாவையொட்டி, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து 48 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 47 லட்சத்து 67 ஆயிரத்து 695 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

சுதந்திர தினவிழாவையொட்டி, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து 48 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 47 லட்சத்து 67 ஆயிரத்து 695 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கோட்டை முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர், நேதாஜி விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்ததுடன், எஸ்.பி. பிரவேஷ்குமார் தலைமையிலான காவலர் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகள் என 82 பேருக்கு ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்தார்.
பிறகு, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக் கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 47 லட்சத்து 67 ஆயிரத்து 695 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். மேலும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 150 அரசு அலுவலர்களுக்கும், தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற 9 விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், தோட்டப்பாளையம் அரசு மகளிர் பள்ளி, வேலூர் செயின்ட் மேரிஸ் மகளிர் பள்ளி, சத்துவாச்சாரி எத்திராஜ் மெட்ரிக். பள்ளி, காட்பாடி ஆக்ஸீலியம் மகளிர் பள்ளி, காட்பாடி சிருஷ்டி மெட்ரிக். பள்ளி, வாலாஜாபேட்டை வேதவள்ளி மெட்ரிக். பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவ, மாணவிகள் பங்கேற்று கண்கவரும் உடையணிந்து நடனமாடினர்.
நிகழ்ச்சியில், வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் எஸ்.வனிதா, வேலூர் சரக சிறைத் துறை துணைத் தலைவர் ஜெயபாரதி,  சார்-ஆட்சியர் (வேலூர்) கா.மேகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
விழாவைத் தொடர்ந்து வேலூர் நேரு பூங்கா எதிரே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க  பார்வையற்ற பள்ளிக் குழந்தைகள் மையம், வேலூர் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள அலுவலர் குழும வளாகம் ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பள்ளி, கல்லூரிகளில் ...
ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்லூரியின் தாளாளர்  டி.தரணிபதி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் எஸ்.ஆதிகேசவன், கல்லூரி முதல்வர்கள் எஸ்.ஆதிகேசவன் (பாலிடெக்னிக் கல்லூரி), ஆர்.ராஜா (பொறியியல் கல்லூரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
கல்லூரியின் பொருளாளர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன், செயலாளர்  ஜி.செல்வகுமார் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். கல்லூரித் தலைவர் கே.குப்புசாமி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில், கல்லூரியின் இயக்குநர்கள்  எம்.மானக், எஸ்.ரமேஷ் ,டி.பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரி மற்றும் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரியின் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரியின் பொருளாளர்  ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆற்காடு ஆண்டாள் நிதியுதவி  நடுநிலைப் பள்ளியில்  தலைமையாசிரியர் பிரபாகரன் தலைமையில்  பள்ளியின் நிர்வாகி  எச்.நக்கீரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆற்காடு லட்சுமி லோகநாதன் மெட்ரிக். பள்ளியில் லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் பாலாஜி லோகநாதன்  தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
ஆம்பூரில்...
ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஆம்பூர் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதியுமான ஏ. கதிரவன் தேசியக் கொடியேற்றினார். குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி. ரூபனா மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் ஐஇஎல்சி காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் தொழிலதிபர் ஆர்.டி. சரவணன் தேசியக் கொடியேற்றினார். பள்ளியின் தாளாளர் து.டேனியல், தலைமை ஆசிரியர் ஞா. ஜேபஸ் எழில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எம். தீனதயாளன் தேசியக் கொடியேற்றினார். முதல்வர் ஜி.நாகராஜன், டி.ஆர்.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி த. ராஜமன்னன் தேசியக் கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் ஹிரானி சாஹிப், துணை முதல்வர் முஹம்மத் ஷாஹின்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைவர் கோபால் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பள்ளிச் செயலாளர் கந்தசாமி, வாணி கல்வியில் கல்லூரி முதல்வர் கருணாநிதி, உறுப்பினர்கள் பொன்னுசாமி, சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளி தேசியக் கொடி ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். சிகரம் அறக்கட்டளை உறுப்பினர்கள் பேராசிரியர் அப்துல்காதர், மணி, ராஜேந்திரன், நீதிமோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை டி.எஸ்.பி. முரளி ஏற்றுக் கொண்டார். 
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் செல்வநாயகி, மேலாளர் சபானா, நிர்வாக அலுவலர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். 
டிவிகேவி உயர் நிலை பள்ளியில் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் உறுப்பினர் சரவணன் தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். செயலாளர் திருச்செல்வம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தந்த பள்ளி உறுப்பினர் சரவணனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் துரை தலைமையில் கிராமக் கல்வி குழுத் தலைவர் தினேஷ் கொடியேற்றினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் லீலாவதி சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  
வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் முதல்வர் நடராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நிர்வாகி சுதர்சன்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முதல்வர் செந்தில்ராஜ் மற்றும் பேராசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments