முதல்வர் விஜய் அறிவித்த 3 சிலிண்டர் இலவசம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
முதல்வர் விஜய் அறிவித்த அன்னபூரணி இலவச சிலிண்டர் திட்டத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும் அதற்கான தகுதி என்ன என்பது பற்றி..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஆண்டுக்கு மூன்று எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் பேரவையில் அறிவித்தார்.
2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும், என்றும் 1.30 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்தார்.
ஆனால், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தபோது, இது நேர்மையான உத்தரவாதம், சிலர் மாதிரி அள்ளி விடும் அவசர அறிக்கை இல்லை என்று துவக்க உரையாற்றிவிட்டு, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர் திட்டங்களை எல்லாம் அப்போதைய தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.
Advertisement
Advertisement
அவரது அறிவிப்பில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோம் ஆறு விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும். விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இதனால், சிலிண்டர் இலவசம் என்ற வாக்குறுதி நிச்சயம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும், அனைவருக்கும் இலவச சிலண்டர்கள் கிடைக்கும் என்றே பலரும் எண்ணியிருந்தார்கள்.
ஆனால், தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஆனால், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர், குறு, சிறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினருக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பினால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு மாதத்துக்கு 21 ஆயிரத்துக்குள் வருமானம் இருந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்துக்கு இந்த சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தமிழ்நாட்டில், குடும்பத் தலைவிகளை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு.
ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால்
பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினர்.
சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பத்தினர்
மாற்றுத்திறனாளியைக் கொண்டிருக்கும் குடும்பத்துக்கு இந்த சலுகை கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்
ஒரு குடும்பத்தில், குடும்பத் தலைவியாக இருப்பவரின் ஆதார் அட்டை
தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட குடும்ப அட்டை.
எரிவாயு சிலிண்டர் இணைப்புப் புத்தகம்
குடும்பத்தின் எரிவாயு இணைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்குப் புத்தகம்
குடும்பத்தினருக்கு வரும் அனைத்து வகையான
வருவாயையும் குறிக்கும் ஆண்டு வருவாய் சான்றிதழ்
மாற்றுத்திறனாளியைக் கொண்டு குடும்பத்தினராக இருந்தால் மாற்றுதிறன் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
நியாய விலைக் கடைகளின் தரவுகள் மற்றும் எல்பிஜி இணைப்பு விவரத்தை ஒப்பிட்டு, தமிழக அரசு பயனாளிகள் பட்டியலை தயாரிக்கும்.
குடும்ப அட்டையுடன் எல்பிஜி இணைப்பு இணைக்கப்பட்டிருந்தால், அவர்கள் இந்த பட்டியலில் தாமாகவே இணைக்கப்படுவார்கள்.
ஒருவேளை, குடும்ப அட்டையுடன் எல்பிஜி விவரம் இணைக்கப்படாவிட்டால் இணைக்கும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.
பிறகு, பட்டியலில் உள்ள குடும்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் 3 சிலிண்டர்கள் பெற தகுதி பெறுவார்கள்.
வழக்கம் போல சிலிண்டர் முன்பதிவு செய்து சிலிண்டரை பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
அதற்கான ரசீது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் அரசுக்கும் வழங்கப்படும். சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட ஒரு சில நாள்களுக்குப் பின், சிலிண்டர் விலை வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர் வாங்கும் தகுதிவாய்ந்தவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறது.
Three free cylinder Who is eligible? What are the criteria? How to apply?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.