புதிய கட்டடத்தை எதிர்நோக்கும் கந்திலி ஒன்றிய அலுவலகம்
போதிய இட வசதிற்ற பழையக் கட்டடத்தில் இயங்கும் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர
போதிய இட வசதிற்ற பழையக் கட்டடத்தில் இயங்கும் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கந்திலியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் உள்ளது. தற்போது உள்ள கட்டடம் 1961-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
சுமார் 57 ஆண்டுகாலம் பழைமையான இக்கட்டட வளாகம் 3,200 சதுர அடியில் உள்ளது. இதில், 2,400 சதுர அடி பரப்பளவில் கட்டடம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தின் கீழ் 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அரசு உதவிகள் பெறுவதற்கும், அரசின் நலத் திட்டங்களை அறிவதற்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஒன்றிய அலுவலகத்தில் அமரவோ, நிற்கவோ போதிய இடவசதி இல்லை. இதனால் அலுவலகக் கூட்டம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடத்த முடியாத நிலை உள்ளது.
இங்கு அலுவலகத்துக்கு இருப்பு அறை இல்லாததால் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. மழை பெய்தால் ஜன்னல் ஓரத்தில் உள்ள ஆவணங்கள் நனைந்து பாழாகின்றன.
அரசின் நலத் திட்டங்களை அறிந்துக்கொள்வற்காக அலுவலகப் பிரிவு குறித்த பலகைகள் இல்லை. இதனால், அரசின் நலத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள எந்தப் பிரிவுக்குச் செல்ல வேண்டும் என்பது தெரியாமல் புதிதாக அலுவலகம் வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
வேறிடத்துக்கு மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு...
இதனால், இந்த அலுவலகத்தை திருப்பத்தூர் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் இடமாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், வேறு இடத்துக்கு மாற்றினால் பொதுமக்கள் வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும் எனக் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் அலுவலக சுற்றுச் சுவர் சேதமடைந்துள்ளது. பலத்த மழை பெய்தால் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே, கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், இந்த அலுவலகத்துக்கென புதிய கட்டடமும் கட்டித் தர அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே இந்த கந்தலி ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.