இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மனைவி சாவு; கணவர் காயம்
ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர் பலத்த காயம் அடைந்தார்.
ராணிப்பேட்டையை அடுத்த அவரக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன் (50). இவரது மனைவி உமாராணி (45). உமாராணி ராணிப்பேட்டை புறவழிச் சாலையில் இயங்கி வரும் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், உமாராணியை அவர் பணிபுரியும் தொழிற்சாலையில் விடுவதற்காக மேகநாதன் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரக்கரையில் இருந்து ராணிப்பேட்டை வழியாக திங்கள்கிழமை சென்றார். கிருஷ்ணகிரி டிரங்க் சாலையில் சென்றபோது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒரு வழிப்பாதையில் எதிரே வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீதி மோதியது. இதில் உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த மேகநாதன் மீட்கப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராணிப்பேட்டை போலீஸார், உமாராணியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.