திருவலம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திருவலம் அருகே பொன்னை ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தியும், அதைத் தடுக்க தவறிய வருவாய்த் துறையைக் கண்டித்தும்
திருவலம் அருகே பொன்னை ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தியும், அதைத் தடுக்க தவறிய வருவாய்த் துறையைக் கண்டித்தும் புதன்கிழமை, பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பொன்னை ஆற்றில் பொன்னை ஊராட்சியில் தொடங்கி பாலாற்றில் கலக்கும் தெங்கால் ஊராட்சி வரை நாள்தோறும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள கிராம மக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீக்கராஜபுரம் கிராம மக்கள் காட்பாடி தொகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெ.ராஜசேகர் தலைமையில், காங்கிரஸ் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஒய். தினகரன் மற்றும் சீக்கராஜபுரம் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சீக்கராஜபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்து மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.