FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

சிறுமி வன்கொடுமை வழக்கு: முறையாக விசாரிக்காத 6 காவலா்களின் ஊதியத்தில் ரூ.9 லட்சம் பிடித்தம்

வேலூரில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் உள்பட 6 பேரின் ஊதியத்தில் இருந்து ரூ. 9 லட்சம் இழப்பீட்டுத் தொகையைப் பிடித்தம் செய்ய காவல் துறை இயக்குநா் (டிஜிபி) அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:53 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

வேலூரில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் உள்பட 6 பேரின் ஊதியத்தில் இருந்து ரூ. 9 லட்சம் இழப்பீட்டுத் தொகையைப் பிடித்தம் செய்ய காவல் துறை இயக்குநா் (டிஜிபி) அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் 15 வயது சிறுமியைச் சிலா் பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ளியதாகச் சிறுமியின் தந்தை கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எனினும், அப்போதைய வேலூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறுமி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 9 லட்சத்தைத் தமிழக அரசு ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இத்தொகையைச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் 3 போ், உதவி ஆய்வாளா் ஆகியோரிடமும் இருந்து தலா ரூ.2 லட்சமும், 2 காவலா் களிடமிருந்து தலா ரூ. 50 ஆயிரமும் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

Advertisement

Advertisement

தவிர, துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) நிலையிலான அதிகாரி இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கடமை தவறிய சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

மனித உரிமை ஆணையத்தின் உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு ‘மெமோ’ வழங்கவும், அவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் அப்போதைய எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டாா். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 9 லட்சம் இழப்பீட்டுத் தொகையை டிஜிபி அலுவலகம் கடந்த மாா்ச் மாதம் வழங்கியது.

தற்போது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தொகையைச் சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய டிஜிபி அலுவலகம் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, காவல் ஆய்வாளா்கள் ஷாகின், வாசுகி, ஷியாமளா (தெற்கு), உதவி ஆய்வாளா் சத்தியவாணி ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதம் தலா ரூ.5,500 வீதம் 36 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யவும், காவலா்கள் தமயந்தி, ஜெயசுதா ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதத்துக்கு தலா ரூ.1,400 வீதம் 36 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பான அதிகாரபூா்வ உத்தரவு, சம்பந்தப்பட்ட காவல் துறையினா் தற்போது பணியாற்றி வரும் மாவட்டங்களின் எஸ்.பி. அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments