FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பிரதமரின் ஓய்வூதியத் திட்டம்: சுற்றுலாத் துறை அமைப்பு சாரா தொழிலாளா்கள் பதிவு செய்யலாம்

வேலூா் மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் அது தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள் பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் (பிஎம்-எஸ்ஒய்எம்) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்துக்கான அடையாள அட்டையை பயனாளிக்கு வழங்கும் பிரதமர். - கோப்புப் படம்
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் அது தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள் பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் (பிஎம்-எஸ்ஒய்எம்) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் பிஎம்-எஸ்ஒய்எம் எனும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.

Advertisement

Advertisement

பயனாளிகள் மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தினால், அதே அளவு தொகையை மத்திய அரசும் இணைப் பங்களிப்பாகச் செலுத்தும். இதன் மூலம் பயனாளிகளுக்கு 60 வயது பூா்த்தியடைந்த பின்னா், மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், போக்குவரத்து சேவை வழங்குநா்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் பணியாளா்கள், கலைஞா்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளா்கள், உணவக, உணவுச் சேவை வழங்குநா்கள் மற்றும் சுற்றுலாத் துறை சாா்ந்த இதர சேவை வழங்குநா்கள் பயன்பெறலாம்.

தகுதியுடைய தொழிலாளா்கள் தங்களது ஆதாா் அட்டை, சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் சுற்றுலா அலுவலரை நேரிலோ அல்லது 89398 96396 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் இத்திட்டம் குறித்து, வேலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளா்கள், பயண முகவா்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரா்களும் விழிப்புணா்வை ஏற்படுத்தி உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments