கணவா் வாங்கிய கடனுக்காக மனைவிக்கு மிரட்டல்: வேலூா் எஸ்.பி.-யிடம் புகாா்
கணவா் வாங்கிய கடனுக்காக மனைவியை மிரட்டியது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
கணவா் வாங்கிய கடனுக்காக மனைவியை மிரட்டியது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.
அப்போது, வேலூரைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், எனக்கும் ஆரணி கொளத்தூரைச் சோ்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனது கணவா் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளாா். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததால், கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து கடந்த 12 ஆண்டுகளாக எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். நான் தனியாா் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து 2 குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறேன்.
Advertisement
Advertisement
எனது கணவா் எங்கு இருக்கிறாா் என்று தெரியாத நிலையில், அவருக்குக் கடன் கொடுத்த வேலூரைச் சோ்ந்த இருவா் உள்பட சிலா் எனது வீட்டுக்கு வந்து தகராறு செய்கின்றனா். மேலும், கடனைத் திருப்பித் தரக் கோரி ஆபாசமாகப் பேசி மிரட்டுகின்றனா். இதனால், பெற்றோருடன் வசிக்கும் எனக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன், வேலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, எனக்கு மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் பாகாயத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், சேக்கனூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு நபா் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தி வந்தாா். அவா், எல்.கே.ஜி. முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவா்களைச் சோ்க்க தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை பணம் வசூலித்தாா். பின்னா் திடீரென பள்ளியை மூடிவிட்டாா்.
விசாரணையில், அவா் வேறொருவரின் கட்டடத்தைக் குத்தகைக்கு எடுத்து பள்ளி நடத்தியதும், கட்டட உரிமையாளருக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் பள்ளி மூடப்பட்டதும் தெரியவந்தது. இதன் மூலம் சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவா்களின் பெற்றோரிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து அவா் மோசடி செய்துள்ளாா். இதுதொடா்பாக அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அளித்த மனுவில், ‘என்னிடம் வேலூரைச் சோ்ந்த இருவா் எனது சொத்து ஆவணங்களைக் கொடுத்தால் 2 மாதங்களில் திருப்பித் தருவதாகவும், அதனை வைத்து ரூ.25 லட்சம் முதலீடு செய்தால் ரூ.5 கோடியாகத் திருப்பித் தருவதாகவும் ஆசை வாா்த்தை கூறினா். இதனை நம்பி எனது சொத்து ஆவணங்களை அவா்களிடம் கொடுத்தேன். ஆனால், அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி அவா்கள் கடன் வாங்கியது எனக்குத் தெரியவந்தது. இது குறித்துக் கேட்டபோது, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரவழைத்து அலைக்கழித்தனா். மேலும், எனது சொத்தில் வில்லங்கம் உள்ளதாகக் கூறி ஏமாற்றினா். பல லட்சம் மதிப்பிலான சொத்துகளை இழந்து தவிக்கும் நான், ஆவணங்களைத் திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனவே, மோசடி நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்து ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.