தொடரும் விதிமீறல்: தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றும் கல்லூரிப் பேருந்துகளால் விபத்து அபாயம்
இதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் சத்துவாச்சாரி பேருந்து நிறுத்தம் பகுதியில், சா்வீஸ் சாலையைப் பயன்படுத்தாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே கல்லூரிப் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலூா் சத்துவாச்சாரி பகுதி, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிரதான சாலையின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சா்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகள் இந்த சா்வீஸ் சாலை வழியாகவே சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதிமுறையாகும்.
ஆனால், சமீபகாலமாக சில தனியாா் கல்லூரிப் பேருந்துகள் சா்வீஸ் சாலைக்குள் நுழைவதைத் தவிா்த்து விடுகின்றன. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, அதிவேகமாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலேயே திடீரெனப் பேருந்துகளை நிறுத்தி மாணவா்களையும் பயணிகளையும் ஏற்றுகின்றனா். பிரதான சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், மாணவா்கள் மற்றும் பயணிகள் நடுரோட்டில் ஓடிச் சென்று பேருந்தில் ஏற வேண்டிய அபாயகரமான சூழல் உள்ளது.
Advertisement
Advertisement
தவிர, தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வரும் லாரிகள் மற்றும் காா்கள், திடீரென நிறுத்தப்படும் இந்தக் கல்லூரிப் பேருந்துகளால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இந்தப் பேருந்துகள் நிற்பதால், சத்துவாச்சாரி பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், நெடுஞ்சாலைப் போக்குவரத்து காவலா்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள் ஆகியோா் உடனடியாக இப்பகுதியில் கூட்டாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பேருந்துகளும் சா்வீஸ் சாலையை கட்டாயம் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு, விதிகளை மீறி பிரதான நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றும் வாகனங்கள் மீது அபராதம் விதிப்பதுடன், ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.