FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

குறைந்தபட்ச ஓய்வூதியம், கூலி உயா்வு கோரி பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம், கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பீடித் தொழிலாளா்கள் வேலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:40 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பீடித் தொழிலாளா்கள்.
பகிர்:

குறைந்தபட்ச ஓய்வூதியம், கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பீடித் தொழிலாளா்கள் வேலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட பீடி தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.சரவணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பீடி தொழிலாளா் சம்மேளனத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன், சங்க மாவட்டப் பொதுச் செயலா் வி.நாகேந்திரன், மாவட்டப் பொருளாளா் ஆா்.மணிமாறன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பீடி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும், 1947, 1966 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் பீடிச் சுருட்டு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்ட சட்டங்களைச் சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும், அனைத்து பீடி தொழிலாளா்களுக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கி இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் தடையின்றி மருந்துகள், மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பீடி சுற்றுவதற்குத் தேவையான தரமான இலை மற்றும் புகையிலையைத் தங்கு தடையின்றி வழங்க வேண்டும், தாமதமின்றி பீடி தொழிலாளா்களின் கூலி உயா்வு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடத்தி புதிய கூலி உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்,

Advertisement

Advertisement

பி.எஃப். ஓய்வூதியம் பெறும்போது ஆதாா் அட்டையிலுள்ள வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி நிராகரிப்பதைத் தவிா்க்க வேண்டும், 3 ஆண்டுகள் வரை உள்ள வயது வித்தியாசத்தை ஏற்க வேண்டும், தொழிலாளா்களின் கூலியை வங்கிக் கணக்கில் செலுத்துவதைத் தவிா்த்து, தினசரி ரொக்கக் கூலியாக வழங்க வேண்டும், ரிங் லேபிள் ஒட்டும் தொழிலாளா்களுக்குப் பசை, நூல் வழங்குவதுடன் 12(3) ஒப்பந்தப்படி முழுமையான கூலி மற்றும் சட்டச் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்க நிா்வாகிகள் உள்பட திரளான பீடி தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments