FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதி மறைவு: தொழில் அமைப்புகள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு கோவை தொழில் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு கோவை தொழில் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ப.நடராஜ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் ஏழு கோடி மக்களின் ஆணிவேராகத் திகழ்ந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.கருணாநிதி இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகவும் துயருக்கு உள்ளாகியிருக்கிறோம்.
தமிழ்நாடு இன்று தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக விளங்குவதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஜவுளித் துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளை நன்றியுடன் நினைவில்கொள்கிறோம்.
மத்திய அரசின் திட்டங்களான ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம், பருத்தி வளர்ச்சி இயக்கம் கொண்டு வருவதில் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. 2004 ஆம் ஆண்டில் விருப்ப வரியை மத்திய அரசு கொண்டு வந்ததன் மூலம் அனைத்து ஜவுளிப் பொருள்களுக்கும் கலால் வரி இல்லாத சூழல் உருவாக உதவினார்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், போனஸ் போன்றவற்றில் அவர் எடுத்த முடிவுகள் தொழிலாளர்களுக்கு உகந்ததாக அமைந்தது. தமிழக தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் மென்மையானப் போக்கை கடைப்பிடித்த கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.
காட்மா
கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழர்களின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டவர். தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுக் கொடுத்தவர்.
சமூக நீதிக்காக அயராது பாடுபட்டவர். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகம் தொழில் துறையில் இன்று முன்னோடி மாநிலமாகத் திகழ்வதற்கு கருணாநிதியின் பங்களிப்பு முக்கியமானது.
படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தையும், குறுந்தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த முதலீட்டு மானியம் அறிமுகம் என பல்வேறு திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தியவர். அவரது மறைவு தமிழகத்துக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.
கோப்மா
இலவச மின்சாரம் காரணமாக பம்ப்செட் உற்பத்தியாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கருணாநிதி என்று கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ் தெரிவித்துள்ளார்.
கோப்மா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2010 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு 5 எச்.பி. வரையிலான இலவச மின்சாரத்தை கருணாநிதி வழங்கியதால், கிணறு, ஆழ்துளைக் கிணறுகளுக்கான மோட்டார்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக பயனடைந்தனர்.
அதேபோல் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே சிட்கோ, சிப்காட் போன்றவற்றை தொடங்கினார். மேலும் 2016 ஆண்டில் கோப்மா முன்வைத்த கோரிக்கையை ஏற்று கோவையில் பம்ப்செட் பரிசோதனைக் கூடம் ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்ததையும் நன்றியுடன் நினைவு கூறுவதாக மணிராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை இந்திய தொழில்
 வர்த்தக சபை
திமுக தலைவர் கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 முறை முதல்வராகவும், 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும் இருந்துள்ள கருணாநிதியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இனி நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது முன்னோடியான திட்டங்களாலும், கொள்கைகளாலும் என்றும் வாழுவார்.
அவரது திட்டங்கள் யாவும் சமூக நீதிக்கானதாக இருந்துள்ளன. விவசாயிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மேம்பாட்டுக்காக போராடிய கருணாநிதி, கோவையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பன்னாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், மின்னணு தொழில் நிறுவனங்கள் தொடங்க காரணகர்த்தாவாக இருந்த அவர், தொழில் வர்த்தக சபையின் வைர விழா நிகழ்வில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார்.
 அவரது மறைவு தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் சங்கம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழக விவசாயிகள் சங்கள் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.டி .அரங்கசாமி,  மாநில பொதுச்செயலர் வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கை:  
இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச மின்சார திட்டத்தை அறிவித்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி. கடனிலேயே பிறந்து, கடனிலேயே வாழ்ந்து, கடனிலேயே இறக்கும் விவசாயிகளைக் காப்பாற்ற அவரது ஆட்சி காலத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு கடனிலிருந்து விடுதலை பெற்று தந்தவர். இந்த இரு சரித்தர சாதனைகளை விவசாயிகள் என்றென்றும் மறக்க முடியாது.  அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்
பால் தினகரன்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழகத் வேந்தருமான பால் தினகரன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதியின் மறைவு செய்தி அறிந்து தாங்கவியலாத துயரம் அடைந்தேன். கல்விப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவ,மாணவிகள் தடையில்லாமல் கல்வி பயின்று வாழ்வில் உயருவதற்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தவர்.
மிகச் சிறந்த அறிவாளியான அவர், அபார நினைவாற்றல் கொண்டவர். ஏழைகள் பசியால் வாடக் கூடாது என்று மானிய விலை அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். தந்தையை இழந்து தவிக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் விரைவில் ஆறுதல் பெற்று மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments