கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைப் பேரணி
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை பேரணி நடத்தினர்.
பொதுமக்களுக்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலமாக ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட 24 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது சான்றிதழ்கள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு இ சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சான்றிகழ்களை வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் ஆன்லைன் முறையில் பரிந்துரை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கான செலவினங்களை வழங்க வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து, பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்யப்படும் பணிகளை அண்மையில் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தர்னாவில் ஈடுப்பட்டனர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் மற்றும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்க வேண்டும். ஆன்லைன் மற்றும் கணினி வழியில் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்படும் செலவினங்களை அளிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன கோரிக்களை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வ.உ.சி. பூங்கா வரையில் கோரிக்கைப் பேரணி நடத்தினர். சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.