3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவையில் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 18.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கத்துடன் கூடிய
கோவையில் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 18.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவித் தொகையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமூக நலத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
பெண்கள் நலன்காக்கும் வகையில் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணிகளுக்கு 18 ஆயிரம் நிதி உதவி, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அக்குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ. 25 ஆயிரம் வைப்புத் தொகை, ஆதரவற்ற பெண்களுக்கு கறவை மாடு, 4 ஆட்டுக் குட்டிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். தமிழக அரசு இத் திட்டங்களை எல்லாம் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டத்தில் 2016 இல் இருந்து தற்போது வரையில் 4,331 பயனாளிகளுக்கு ரூ. 27.42 கோடி மதிப்பில் 8 கிராம் தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பட்டம், பட்டயப் படிப்பு படித்த 2,070 பெண்களுக்கு திருமண நிதி உதவித் தொகையாக தலா ரூ. 50 ஆயிரம், பத்தாம் வகுப்பு படித்த 930 பெண்களுக்கு திருமண நிதி உதவித் தொகையாக தலா ரூ. 25 ஆயிரம் என மொத்தம் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 12.67 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி, ரூ. 6.2 கோடி மதிப்பில் தலா 8 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 18 கோடியே 70 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை ஏ.சண்முகம், ஆர்.கனகராஜ், கஸ்தூரி வாசு, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.