FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பள்ளிகளால் தேர்ச்சி விகிதம் குறைவு: சரி செய்ய நடவடிக்கை

பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளாலேயே மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாகவும், வரும் ஆண்டில் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்மைக்

Updated On : 25 மே 2018, 4:29 am IST
பகிர்:

பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளாலேயே மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாகவும், வரும் ஆண்டில் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டு தேர்வுகளிலுமே கோவை மாவட்டம் பின்தங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.35 சதவீதம் குறைவாக 95.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், கோவை மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் 87.31 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் கட்டிலும் 4.49 சதவீதம் குறைவாகும். அதேபோல், பத்தாம் வகுப்புத் தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.56 சதவீதம் குறைவாக 95.86 சதவீத மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.08 சதவீதம் குறைந்து 89.63 சதவீதமாகியுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்கப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதன்மைக் கல்வி அலுவலர், தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதற்கான காரணங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் வரும் ஆண்டுகளில் பிரச்னையை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததாலேயே பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி, நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை அறியவும், அவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்காக, மாவட்ட ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தும், தனியார் நிறுவனங்களில் இருந்தும் ஒரு பள்ளிக்கு 2 உளவியல் நிபுணர்கள் வீதம் பயன்படுத்தப்படுவார்கள். மேலும், இந்த ஆண்டு கணிதம், கலைப் பிரிவு பாடங்களிலேயே அதிக அளவிலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த பாடங்களுக்கு கூடுதலான திருப்புத் தேர்வுகள் நடத்தியும், கூடுதலான பயிற்சி வகுப்புகள் நடத்தியும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன், ஒவ்வொரு பள்ளியும் தங்களின் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து எந்தெந்த பள்ளிகளில் எந்தெந்த பாடங்களை பலப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.
வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் 50 சதவீத அரசுப் பள்ளிகளில் முழு தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயலாற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டதும் இதேபோன்ற கூட்டம் ஆசிரியர்களுக்காகவும் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments