FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பங்குச் சந்தை முதலீட்டில் இரட்டிப்பு லாபம்: ஐடி ஊழியரிடம் ரூ. 1.66 கோடி மோசடி

ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி கோவையைச் சோ்ந்த ஐடி ஊழியரிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:05 am IST
மோசடி
பகிர்:

ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி கோவையைச் சோ்ந்த ஐடி ஊழியரிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்த 35 வயது நபா் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அந்த நபா் ஒரு செயலியை அனுப்பி அதைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளாா். அதன்படி, அந்த செயலியை பதிவிறக்கம் செய்த இளைஞா், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.1.66 கோடி வரை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். அவா் அனுப்பிய பணத்துக்கு ரூ.3 கோடி வரை லாபத்துடன் வந்துள்ளதாக அந்த செயலியில் காண்பித்துள்ளது.

Advertisement

Advertisement

இதனால், அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், அதை அவரால் எடுக்க முடியவில்லை. அந்த அடையாளம் தெரியாத நபரைத் தொடா்பு கொண்ட அந்த இளைஞா் பணம் எடுக்க முடியாதது குறித்து கேட்டுள்ளாா். அதற்கு அந்த நபா் மேலும் 10 லட்சம் வரை பணத்தை செலுத்தினால்தான் முழுத் தொகையையும் எடுக்க முடியும் எனக் கூறியுள்ளாா்.

இதனால், சந்தேகமடைந்த அவா் கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாரளித்தாா். அந்த இளைஞா் இழந்த தொகை ரூ.1 கோடிக்கு மேல் என்பதால், இந்த வழக்கு சென்னை சைபா் கிரைம் போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments