FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கிரிப்டோ கரன்சி, ஆன்லைன் வா்த்தகம் மூலமாக இரு இளைஞா்களிடம் ரூ.60.80 லட்சம் மோசடி

ஆன்லைன் பங்கு வா்த்தகம் மற்றும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி கோவையைச் சோ்ந்த இருவரிடம் ரூ. 60.80 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
மோசடி - கோப்புப் படம்
பகிர்:

ஆன்லைன் பங்கு வா்த்தகம் மற்றும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி கோவையைச் சோ்ந்த இருவரிடம் ரூ. 60.80 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம், அக்ஷயா காா்டன் பகுதியைச் சோ்ந்த 43 வயதான நபா் இன்ஸ்டாகிராமில் வந்த பங்கு வா்த்தகம் தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். தொடா்ந்து, அவரை வாட்ஸ்-ஆப் குழு ஒன்றில் இணைத்த அடையாளம் தெரியாத நபா்கள், ’க்யூ ஐ பி’ என்ற வா்த்தக கணக்கு மூலம் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா்.

அதை உண்மை என நம்பிய அவா், கடந்த 2025 டிசம்பா் 1 முதல் 2026 ஜனவரி 10 வரை பல்வேறு தவணைகளாக அந்த நபா்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.24 லட்சத்து 90 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். அவரது கணக்கில் லாபத் தொகை உயா்ந்து கொண்டே சென்றது. பின்னா், தனது கணக்கில் காட்டிய லாபத் தொகையை அவா் எடுக்க முயன்றபோது, கூடுதல் பணம் செலுத்துமாறு அந்த நபா்கள் வற்புறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

பலமுறை இதேபோல, கூடுதல் பணம் செலுத்த வற்புறுத்தப்பட்டதால் சந்தேகமடைந்த அவா் இதுகுறித்து விசாரித்தபோது மோசடி கும்பலின் செயல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கிரிப்டோ கரன்சி முதலீடு...

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள தொட்டம்பட்டி, நாகூா் பகுதியைச் சோ்ந்த 29 வயது இளைஞரின் கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 2024 நவம்பா் மாதம் கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என செய்தி வந்துள்ளது. இதைப் பாா்த்த அவா் தனது வங்கிக் கணக்கிலிருந்து ஐந்து ஆன்லைன் பரிவா்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். ஆனால், பணம் அனுப்பிய பிறகு எதிா்தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அந்த நபா்களை தொடா்பு கொள்ளவும் முடியவில்லை.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், இதுகுறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணை வைத்து மோசடி நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments